மரணத்தின் பின்
ந.சி. கந்தையா
1. மரணத்தின் பின்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. மரணத்தின் பின் (WHAT HAPPENS AFTER DEATH)
மரணத்தின் பின்
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : மரணத்தின் பின்
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
மரணத்தின் பின் (WHAT HAPPENS AFTER DEATH)
முன்னுரை
மரணம் என்று நினைக்கும்போதே மனக்கண்ணின் எதிரே ஒருவகை இருளும் அச்சமுந்தோன்றுகின்றன. மரணத்துக்குப்பின் செல்லும் இருண்ட வழியில் என்ன ஆகுமோ என்று மனிதன் ஏங்குகின்றான். அப்பொழுது இறந்தார் பொருட்டுக் கிரியைகள் செய்தால், அவர்கள் நல்லுலகை அடைவார்கள் எனச் சமய குருமார் கூறிப் பல கிரியைகளை வகுத்தும், கருடபுராணம் போன்ற நூல்களை எழுதியும் மக்களை அச்சுறுத்தியும், அவற்றின் மூலம் வருவாய் பெற்று வருகின்றனர். இது குருடனுக்குக் குருடன் வழி காட்டியது போலாகும். ஆவிகள் மறு உலக வாழ்க் கையைப் பற்றிக் கூறிய பல செய்திகளைப் படிக்கும்போது, குருமாரின் சடங்குகளினால் யாதும் பயன் இல்லை என்றும், இவ்வுலக வாழ்வில் மக்கள் பிறர்க்கு நன்மை புரியும் உயரிய உள்ளமுடையவர்களாய் வாழின், அதனால் நன்மை அடைதல் கூடுமென்றும் தெரிகின்றன. இன்று இறந்தவர்மேல் பற்று வைத்துள்ள அவரது சுற்றத்தவர், அவர்கள் நல்வழிப்பட வேண்டு மென்னும் விருப்பினால் தாம் அரிதில் முயன்று தொகுத்து வைத்திருக்கும் பொருளைக் கிரியைகள் மூலம் பிறருக்கு இறைத்து வருகின்றனர். இவைபோன்ற பயனற்ற செயல்களில் பொருளையும் அரிய காலத்தையும் செலவழி யாது, மக்களை நல்வழியில் ஊக்கும் பொருட்டு இந் நூல் எழுவதாயிற்று.
ந.சி. கந்தையா
மரணத்தின்பின்
தோற்றுவாய்
“உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” (குறள். 339)
மரணத்துக்குப் பின் என்ன நிகழ்கின்றது என்னும் கேள்வி மனிதன் தோன்றிய காலம் முதல் எழுந்துள்ளது. அன்று முதல் இன்று வரையும் இக் கேள்விக்கு விடை அறிய மக்கள் முயன்று வருகின்றார்கள். இம்முயற்சி யினாலேயே உலகில் சமயங்களும் தத்துவக் கொள்கைகளும் தோன்றி வளர்ச்சி எய்தன. ஆதிகாலம் முதல் மரணம் என்றால் என்ன? மரணத்துக்குப் பின் உயிர் நிலை பெறுகின்றதா? அல்லது அழிந்து போகின்றதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகள் அறியப்பட்டிருந்தன. மரணத்துக்குப் பின் உயிர் அழிந்து போகின்றது என்னும் கொள்கையுடைய மக்கள் இவ் வுலகில் எங்கும் காணப்படவில்லை. மரண காலத்தில் உயிர் இவ்வுடலை விட்டு ஆவி வடிவான இன்னொரு உடலோடு வெளியேறி விடுகின்றது என்னும் உண்மை எல்லா மக்களாலும் மிகப் பழங்காலம் முதல் அறியப் பட்டிருந்தது. பலர், இவ் வாவி வடிவங்களைப் பார்த்தார்கள். இன்றும் சிற்சிலர் கண்களுக்கு அவை தோன்றுகின்றன. இவ்வுலகில் இறந்தவர்களின் ஆவிகள் நிறைந்துள்ளன என நம்பும் மக்கள் காணப்படுகின்றார்கள். ஆவிகளில் தீயவை பேய்கள் என்றும், நல்லவை தேவர்(angels) என்றும் அறியப் பட்டன இவைகளைப்பற்றிய விளக்கம் மிகவும் அற்பமாகவே இருந்து வந்தது. சென்ற நூற்றாண்டு முதல் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆவிகளோடு பேசும் இயக்கம் ஒன்று தோன்றி வளர்ச்சியடைவதாயிற்று. இவ் வாராய்ச்சியில் பலர் ஈடுபட்டுள்ளார்கள்; நூற்றுக்கணக்கான சங்கங்கள் தோன்றின. இக் கருத்துகளையும், நிகழ்ச்சிகளையும் பத்திரிகைகளும் புத்தகங்களும் வெளியிட்டன; வெளியிடுகின்றன. ஆவிகள் சம்பந்தமான நூல்களின் எண்ணிக்கை மொழி இலக்கியங்களுக்கு இரண்டாவதாக இடம் பெறுகின்றதெனக் கூறப்படுகின்றது. நமது நாட்டிலோ இவ்வகை நூல்கள் ஒன்றேனும் காணப்படவில்லை. மேல் நாட்டு அறிஞர் சிறு உண்மை ஒன்றைக் கண்டுபிடித்தால் அவ்வளவோடு நின்றுவிடமாட்டார்கள்; மேலும் மேலும் ஆராய்ச்சியினாலேயே அவர்கள் நீராவி, மின்சக்தி, பொறிகள்
(machines) என்பவைகளின் பயன்களைக் கொண்டு உயர்ந்த வாழ்க்கை நடத்துகின்றனர். ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சி மிக இன்பந் தருவது. அது மனிதனை மரணத்துக்கு அஞ்சாது இருக்கும்படியும் செய்கின்றது. மரணத்தைப்பற்றிய மனிதனின் ஆராய்ச்சியே சமயத்தின் தொடக்கம். மனிதன் மரணத்தின் பின் உயிர்களின் நிலையைப்பற்றி எவ்வாறு எண்ணி னானோ அக் கொள்கைகளே சமயத்தின் தத்துவக் கொள்கைகளாகவும் இருந்தன. மரணத்தின் ஆராய்ச்சியிலிருந்தே பௌத்தம், சைனம், வேதாந்தம், சித்தாந்தம் போன்ற உயர்ந்த தத்துவக் கொள்கையுடைய மதங்கள் எழுந்தன.
மதங்கள் ஒழுக்கத்துக்கு அடிப்படை. மனிதன் விலங்குகளைப் போல் வாழாது நன்மை தீமை பாவ புண்ணியம் என்பவைகளைப் பகுத் துணர்ந்து ஒழுக்கமுடையவனாய் இவ்வுலகில் வாழ்வதற்கு அடிப்படையா யுள்ளதும் மரணத்தைப் பற்றிய ஆராய்ச்சியே. ஆகவே மரணத்தைப்பற்றி ஆராயும் இந்நூல் சிறந்த சமய நூலாகவும் ஒழுக்க நூலாகவும் பயனளிக்கும். மேல்நாடுகளில் ஆவிகளைப்பற்றிய ஆராய்ச்சி எவ்வாறு தொடங்கிற்று என்னும் வரலாற்றை முதற்கண் கூறுகின்றோம்.
ஆவியைப்பற்றிய ஆராய்ச்சி
மனித வரலாற்றில் தலைசிறந்து விளங்கியவர் டெய்லர்(E. B. Tylor). அவர் மக்களிடையே ஆவிகளைப்பற்றிய கருத்து எவ்வாறு இருந்து வந்ததெனக் கூறியுள்ளார். அது இக்கால ஆவி ஆராய்ச்சியாளர் கூறும் உண்மைகளைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. அவ் வாசிரியர் கூறியுள்ளதை இங்குத் தருகின்றோம். “ஆதிகாலம் முதல் மக்கள் மரணத்துக்குப்பின் உயிர்கள் ஆவி வடிவில் நிலைபெறுகின்றன என்று நம்பி வந்தார்கள். பலர் இறந்தவர்களின் வடிவில் அவைகளைக் கனவிலும் நனவிலும் பார்த்திருக் கிறார்கள். முற்கால மக்கள், தூக்கத்தில் உயிர் வெளியே சென்றிருக்கின்ற தென நம்பினார்கள். தூக்கம் உயிர் மீண்டு வருவதாகிய நித்திரை; மரணம் உயிர் மீண்டு வராததாகிய நித்திரை என்று அவர்கள் கருதினார்கள். உயிர் வெளியே சென்றிருக்கும் நேரத்தில் உடலைக் குழப்புதல் கூடாதென்னும் கருத்துப்பற்றியே தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்புதல் கூடாது என்னும் கொள்கை உண்டாயிற்று. ஹோமர் என்னும் மாகவி தனது இலியட் என்னும் நூலில் பரக்லொஸ்(Paroklos) என்பவன், நித்திரையாயிருக்கும் அச்சில்லிஸ் என்பவனிடம் தனது ஆவி உடலில் வந்தானென்றும், அச்சில்லிஸ் அவனுடைய புகைபோன்ற கையைப் பிடிக்க முயன்றபோது. அது கைக்கு அகப்படவில்லையென்றும், அவன் நிலத்தின்கீழ் மறைந்து விட்டா னென்றும் கூறியுள்ளார். ஹெர்மோற்றிமஸ் (Hermotimos) என்பவர் தனது உடலைவிட்டு ஆவியுலகங்களுக்குச் செல்வது வழக்கம் என்றும், ஒரு முறை உயிர் ஆவி உலகைவிட்டுத் திரும்பி வருவதன் முன் அவன் மனைவி உடலை எரித்துவிட்டாளென்றும், அதனால் உயிர் ஆவி வடிவில் நின்றதென்றும் கூறப்பட்டுள்ளன. ஆதி மக்கள், உயிர், உடல்களைப்பற்றி எவ்வகைக் கருத்துக் கொண்டிருந்தார்களோ அக் கருத்தே இன்றுவரையும் நிலைபெறுகின்றது. நாய், குதிரை போன்ற அஃறிணைப் பொருள்களுக்கும் உயிருண்டு என ஆதிகால மக்கள் நம்பி வந்தார்கள். பியூசி(Fiji) தீவிலுள்ள மக்கள் வில், அம்பு, ஓடம் போன்ற பொருள்களுக்கும் உயிர் இருக்கின்ற தென நம்புகிறார்கள். உலகின் பல பாகங்களில் இறந்தவர்கள் பொருட்டுப் பலிகள் இடப்படுகின்றன. பெரு நாட்டில் ஒரு அரசன் இறந்தால் அவனுடன் கூடத் துணை செல்லும் பொருட்டு அவன் மனைவியர் தூங்கிச் சாக வேண்டும்; பரிவாரங்களிற் பலர் அவனுடன் கூடப் புதைக்கப்படுவார்கள். மடகாசுகரில் இராடமா(Radama) என்னும் அரசன், அவனுடன் புதைக்கப் பட்ட குதிரைகள் ஒன்றின்மீது ஏறி ஆவி வடிவில் தோன்றினான் என்று சொல்லப்பட்டது. அதிகாரிகள் புதைக்கப்பட்ட பழைய சமாதிகளைச் சூழப் பலரது என்புகள் காணப்படுகின்றன. அவ் வென்புகள் அவர்களின் பரிவாரங்களுடையவையாகும். பாட்ரொகொலொஸ்(Patrokolos) என்பவ னின் உடலை எரித்தபோது சிறை பிடிக்கப்பட்ட ட்ரோசன்(Trojan) மக்களும், குதிரைகளும், நாய்களும் எரிக்கப்பட்டனர். சித்திய நாட்டில் (Scythia) இறந்தவர்களை அடக்கஞ் செய்யும்போது இவ்வாறு செய்யப் பட்டதென ஹெரதோதசு கூறியுள்ளார்; மெலீகா என்பவளுடன் அவள் ஆடைகளும் எரிக்கப்படாமையால் அவளது ஆவி குளிரால் நடுங்கிக் கொண்டிருந்ததெனஅவரே குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கணவருடன் மனைவியர் கொளுத்தப்பட்டார்கள். ஐரோப்பாவில் மனைவியரையும் அடிமைகளையும் உடன் புதைக்கும் அல்லது உடன் கொளுத்தும் வழக் கங்கள் நின்றுபோயின; இன்னும் குதிரைகள் கொல்லப்பட்டு இறந்தவர்க ளுடன் எரிக்கப்படுகின்றன. இவ்வாறு செய்வது, குதிரை மறுஉலகப் பயணத்துக்குப் பயன்படும் என்பது கருதியே யாகும். சில இடங்களில் இறந்தவர்கள் வழிப்பயணத்தில் கிழிந்த துணிகளைத் தைப்பதற்காகப் பிணத்துடன் ஊசியையும் நூலையும் வைத்துப் புதைப்பர். சிலர் பிணத்தின் கையில் சிறு பணத்தை வைத்துப் புதைத்தனர். இது மரண ஆற்றைக் கடப்பதற்கு ஓடக்கூலி கொடுப்பதற்காகும். இவ்வாறு மரணத்துக்குப் பின்னும் மக்கள் ஆவி வடிவில் உறைகிறார்கள் என்னும் கருத்து அநாகரிக காலம் முதல் இருந்து வருகின்றது. ஆவிகள் பெரும்பாலும் இராக்காலங் களிலேயே மக்கள் கண்களுக்குத் தோன்றுகின்றன. இரவில் மக்களைக் காண வருமுன் அவை, யாதோ ஓர் இடத்தில் தங்கியிருத்தல் வேண்டும் எனக் கருதப்பட்டது. மரணமடைந்த குடிசைகளிலேயே அவை தங்கு கின்றன எனச் சிலர் கருதினார்கள். ஆகவே ஒருவர் இறந்தால் அக் குடிசையை விட்டு எல்லோரும் வெளியேறினார்கள். சிலர் அவை இடுகாட் டில் தங்குகின்றன என்று நம்பினார்கள். மறு உலகிலோ, மலை உச்சிகளிலோ தங்கி இராக்காலத்தில் அவை இறங்கி வருகின்றன என்று சிலர் நம்பினார்கள். அவை மறுபடியும் குடும்பங்களில் வந்து பிறக்கின்றன என்னும் கொள்கை யும் மக்களிடையே பரவியிருந்தது.
“மரணத்தின்பின் ஆவிகளாக மாறியவர்கள் தமது குடும்பத்தினர் மீது இரக்கமுள்ளவர்களாயிருக்கிறார்கள் என்னும் நம்பிக்கை உண்டாயிற்று. இறந்தவர்களுக்கு ஆண்டில் ஒருமுறை விருந்து இடும் வழக்கம் ஆசியா, ஐரோப்பா என்னும் நாடுகளில் இருந்து வருகின்றது. இவ் வாவிகள் தம் முன்னோராவர் என்னும் கொள்கை மாத்திரமன்று, அவை மக்களுக்கு நன்மையும் தீமையும் செய்ய வல்லன என்றும் கருதப்பட்டது. ஒரு தலைவன் இறந்தால் அவன் ஒரு கடவுள் போல ஆகிறான் என நினைக்கப்பட்டது.”
ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கிறித்துவ மதம் பரவியுள்ளமை யாலும், ஆவிகளின் செயல்கள் பேய்கள் தொடர்பான செயலெனக் கொள்ளப் பட்டமையாலும், பேய்கள் சுவர்க்கத்தினின்றும் வழுக்கி விழுந்த ஒருவகைக் கெட்ட ஆவிகள் எனக் கருதப்பட்டமையாலும், கிறித்துவ குருமார் ஆவிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மதத்துக்கு மாறானவை என்று கொண்டமையாலும், ஆவிகள் சம்பந்தமான ஆராய்ச்சி அமெரிக்கா ஐரோப்பா முதலிய நாடுகளில் தலைஎடுப்பது கடினமாக இருந்துவந்தது. மத்திய காலங்களில் மந்திரவித்தைக்காரரென்று ஐயுறப்பட்டவர்கள், தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டார்கள்; அல்லது ஆற்றில் எறியப்பட்டார்கள். மெஸ்மர் என்பவர் “மெஸ்மெரிசம்” என்னும் வித்தையைப் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து வெளியிட்டபோது அவர் மந்திரவித்தைக்காரர் என்று கருதி ஆஸ்திரிய அரசாங்கம் அவர் அந்நாட்டில் இருப்பதை அனுமதிக்கவில்லை. அவர் பிரான்சிலே சென்றிருந்து தனது ஆராய்ச்சி களை நடத்திப் புகழ் அடைந்து பலரால் போற்றத்தக்கவரானார். கலிலியோ கலிலி என்பவர் தொலைநோக்கியைச்(Telescope) செய்து அதன்மூலம், சூரியனைக் கிரகங்கள் சுற்றுகின்றன என்னும் கொள்கையை வெளியிட்டார். இதற்காக இவர்மீது குற்றஞ்சாட்டி விசாரணை செய்த கத்தோலிக்க மதகுரு அவரைச் சிறையிலடைக்கக் கட்டளையிட்டார். கலிலியோ தனது தொலை நோக்கி மூலம் கிரகங்களை நோக்கித் தான் கூறுவதன் உண்மையை அறிந்து கொள்ளும்படி அவர்களைக் கேட்டபோது அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்தனர். அவ்வாறு செய்யின் ஒருபோது தாங்கள் கொண்டுள்ள கருத்துப் பொய்யாய்விடுதல் கூடுமென அவர்கள் அஞ்சினார்கள். 1இவ்வாறு முற்காலங்களில் புதிய உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்குச் சமயம் பெருந் தடையாக இருந்து வந்திருக்கின்றது.
ஆவி ஆராய்ச்சியைப்பற்றிய வரலாற்றுச் சுருக்கம்
தத்துவ மனோதத்துவ அகராதி2 என்னும் நூலில் ஆவி ஆராய்ச்சி (Spiritualism) என்னும் பொருள்பற்றிக் கூறப்பட்டிருப்பது வருமாறு:
மரணத்துக்குப் பின் ஆவிகள் இவ்வுலகை விட்டு மறு உலகிற் சென்று வாழும் வரலாற்றை ஆராயும் ஆராய்வு ஆவி ஆராய்ச்சி எனப்படும். ஆவி களைப்பற்றிய ஆராய்ச்சி 1848ஆம் ஆண்டு தொடங் கிற்று. நியூயார்க்கிலே ஹைடிவெல்லா என்னும் இடத்தில் நிகழ்ந்ததை ஒத்த நிகழ்ச்சிகள் பல இடங்களில் நிகழ்ந்துள்ளன. 1649இல் வூட்ஸ்டக் (Wood stock) அரண்மனைகளில் நிகழ்ந்த குழப்பங்களும் இவ் வகையினவே. அமெரிக்கா ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் ஆவி ஆராய்ச்சியைப் பற்றி மாத வெளியீடுகள் பல நடத்தப்படுகின்றன.
கதவைத் தட்டிய பேய்
நியூயார்க்கிலே ஹைடிவெல்லா என்னும் இடத்தில் பாக்ஸ் (Fox) குடும்பத்தினர் குடியிருந்தார்கள். 1848இல், அவர்கள் குடியிருந்த வீட்டில் அடிக்கடி தட்டும் சத்தம் கேட்டது. தட்டுகிறவர்களைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. அதனால் அவர்கள் தொந்தரவு அடைந்து வந்தார்கள். தட்டும் சத்தத்தினால் நிலம் அதிர்ந்தது. அவர்கள் அயலவர்களைத் தமக்கு உதவி புரியும்படி அழைத்தார்கள். ஒவ்வொரு அறையிலும ஐந்து அல்லது ஆறு பேர் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். சிலர் வெளியே நின்றார்கள். சத்தம் வழக்கம் போற் கேட்டது. ஒருநாள் பாக்ஸ் வெளியே போயிருந்தார். நித்திரை கொள்ள முடியாதிருந்த அவரது சிறுமிகள் வெளியே தட்டும் சத்தத்தை போலத் தாமும் தட்டினார்கள். இவர்கள் எத்தனை தரம் தட்டினார்களோ அத்தனை தரம் தட்டும் சத்தம் வெளியே கேட்டது. பின்பு பாக்ஸின் மனைவி சிறிய பெண்ணைப் பத்துவரையும் எண்ணும்படி சொன்னாள் உடனே பத்துச் சத்தங்கள் வெளியினின்று வந்தன. பின்பு பாக்ஸின் மனைவி தட்டுவது மனிதரா என்று கேட்டாள். மறுமொழி யில்லை. நீ ஆவியாயிருந் தால் இருமுறை தட்டு என்றாள். இரண்டு தட்டும் சத்தங்கள் வந்தன. இவ் வகையான தட்டும் சத்தங்களால் ஆவியுடன் பேசப்பட்டது. அங்குத் தட்டியது முப்பது வயதுள்ள ஒரு சில்லறை வியாபாரியின் ஆவியென்றும் அவன் பணத்தின் பொருட்டு நடு இரவில் கொல்லப்பட்டானென்றும், அவனுடைய உடல் அவ்விடத்தில் புதைக்கப்பட்டதென்றும் தெரிய வந்தது. அயலவர்களை அழைத்தால் தட்டி மறுமொழி கூறமுடியுமோ என்று கேட்கப் பட்டது; முடியும் என்னும் மறுமொழி தட்டுதல்மூலம் வந்தது. அயலவர்கள் கூடினார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்ட விடைகள் சரியாக விருந்தன. தட்டும் சத்தம் கேட்கும்போது, பாக்சையும் அவர் மனைவியையும் சிறுமிகளையும் பலர் கவனித்தார்கள். அவர்களின் கால்களும் கைகளும் பைகளுக்குள் விட்டுக் கட்டப்பட்டன. அவர்கள் பஞ்சு மெத்தையின்மீது நிற்கும்படி விடப்பட்டார்கள். இச் சத்தம் உண்டா வதில் ஒருவகையான சூழ்ச்சியும் இல்லையென முடிவு செய்யப்பட்டது. இச் செய்தி பரவியது. உடனே குருமார், நீதிபதிகள், சட்ட வல்லுநர் முதலிய பலர் அவ்விடம் சென்றார்கள். பின்பு இத் தட்டுதல் பல வீடுகளிற் கேட்கத் தொடங்கின. பின்பு பாக்ஸ் குடும்பத்தினர் றோசெஸ்ரர் என்னும் இடத்தில் ஒரு வீட்டில் சென்று குடியிருந்தார்கள். அங்கு ஆயிரக்கணக்கானோர் அவர்களிடம் இவ் வியப்பைக் கேட்டறிய வந்தார்கள். இதுவே மேற்குத் தேசங்களில் ஆவியைப்பற்றி ஆராய்வதற்கு ஆரம்பமாக விருந்தது. பாக்ஸ் குடும்பத்தினர் குடியிருந்த ஹைடிவெல்லாவில் கரியுடனும் சுண்ணாம்புடனும் மனித எலும்பு தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டது.
விரிவுரைகள் நிகழ்த்திய வேலையாள்
1845இல் நியூயார்க்கில் ஆண்ட்ரு ஜாக்சன்(Andrew Jackson) என்னும் ஒருவன் இருந்தான். அவன் வறிய நெசவுக்காரனின் மகன். அவன் சப்பாத்துக் கட்டுபவன் ஒருவனிடம் வேலை செய்து வந்தான். அவனிடத் தில் சில ஆற்றல்கள் காணப்பட்டன. அவன் சில சமயங்களில் ஒருவகை மயக்க நிலையை அடைந்தான். அவனுக்குப் பல தெளிவுக் காட்சிகள் தோன்றின. அவன் பல நோயாளரைக் குணப்படுத்தினான். மயக்க நிலை யில் இருக்கும்போது அவனுடைய அறிவு ஆற்றல் அளவு கடந்திருந்தது. அந்நிலையில் நியுயார்க் நகரில் உள்ள அறிஞரின் சார்பில் அவன் 157 விரிவுரைகள் செய்தான். அவை 800 பக்கங்கள் கொண்ட புத்தக வடிவில் அச்சிடப்பட்டன. இவ்வகை ஆற்றல் அவன் வாழ்நாளில் நீண்டகாலம் இருந்து வந்தது. அவனுடைய மாணவனாகிய தாமஸ் லேக் ஹாரிஸ் (Thomas Lake Harris) என்பவன் 384 பக்கங்கள் அடங்கிய பாடல்களை (Lyric of the golden age) தொண்ணூற்றுநான்கு மணி நேரத்தில் சொன்னான். அப் பாடல்கள் மில்டனின் பாடல்களுக்கு இணையானவை என்று வில்லியம் ஹேவிட் புகழ்ந்துள்ளார்.
பையனின் ஆவி
1846இல் முந்நூறு மைல் தூரத்துக்கு அப்பால் வாழ்ந்த பையன் ஒருவனின் தோற்றம் ஹோப்(Hope) என்பவருக்கு முன்னால் தோன்றிக் குறித்த நேரத்துக்கு மூன்று நாட்களின்முன் தான் இறந்துபோனதாகக் கூறிற்று. ஆராய்ச்சியில் அது உண்மையாகக் காணப்பட்டது.
சடப்பொருள்கள் தாமே அசைதல்
சில சமயங்களில் யார் செய்வதென்று அறிய முடியாத சத்தங்களும் வாத்திய ஒலிகளும் கேட்கின்றன; சில சடப்பொருள்கள் தாமே அசைகின்றன. சில வேளைகளில் அறைகள் நடுங்குகின்றன. பூ, பழம் முதலிய பொருள்கள் மூடப்பட்ட அறைக்குள் கொண்டுவரப்படுகின்றன. சில சமயங்களில் அவிழ்க்கமுடியாத முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன.
சில வியப்புகள்
மயக்க நிலைமை அடைந்திருக்கும் ஆவியுடன் பேசுகின்றவர் பிடித்திருக்கும் வாத்தியப் பெட்டி தானே ஒலிக்கின்றது. அவரின் பக்கத்தே இருப்பவர்கள் வைத்திருக்கும் வாத்தியப் பெட்டிகளும் சில சமயங்களில் ஒலிக்கின்றன. பூட்டப்பட்டிருக்கும் “பியானோ” பெட்டிகளில் ஒலி உண்டாகின்றது. சில வேளைகளில் எழுத்துகளும் ஓவியங்களும் மனிதர் வரையாமலே எழுதப்படுகின்றன. மேசைகளின் கீழ் எறியப்பட்ட கடுதாசி களிலும், அல்லது மேசை அறைகளில் வைத்துப் பூட்டப்பட்ட கடுதாசிகளி லும், இரண்டு சங்குப்புரி ஆணியாற் பூட்டப்பட்ட இரண்டு கற்பலகைகளி னிடையே வைத்த கடுதாசிகளிலும் எழுத்துகள் காணப்படுகின்றன. இவ்வாறு எழுதப்பட்டவை ஆவியோடு பேசுகின்றவர் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடைகளாகக் காணப்படுகின்றன. ஓவியங்கள் பல வகையின. சில கற்பலகைகளில் கற்குச்சிகளால் அல்லது வெண்கட்டிகளால் எழுதப்பட்டிருக்கின்றன; சில, கடுதாசியில் எழுதப்பட்டுள்ளன. மனிதர் எழுத முடியாத விரைவில், நிறக்கட்டிகளாலும், நிற மைகளாலும், நிற எண்ணெய் மைகளாலும் எழுதப்படுகின்றது. தெளிவுக்காட்சியுள்ள ஒரு ஸ்கொத்தியர் இருட்டில் அழகிய ஓவியங்களைத் தீட்டியுள்ளார். மேசையி லிருந்து கீழே தொங்கும்படி விடப்பட்டுள்ள துணிக்குக் கீழ் எறியப்பட்ட அட்டைகளின் மீது பதினைந்து அல்லது இருபது நொடிகளுக்குள் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவ்வகை ஓவியங்களிற் பல இறந்துபோன பெஞ்சமின் கோல்மன் என்பவரிடம் இருந்தன. கோல்மன் ஒருமுறை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக ஒரு அட்டையில் இரண்டு இடங்களில் குண்டூசியால் குத்திவிட்டு அதனை மேசையின் கீழ் எறிந்தார். இரண்டு பறவைகள் இரண்டு பூமாலையைப் பிடித்து நிற்பதாக அதன்மீது ஓவியம் வரையப்பட்டிருந்தது. குண்டூசி குத்தப்பட்ட அடையாளங்களில் பறவைகளின் கண்கள் அமைந்திருந்தன. சில சமயங்களில் மேசைகள் அந்தரத்தில் எழுந்தன. ஹோம் என்பவர் தமது கையில் நெருப்புத் தணலை எடுத்து வைத்திருந்தார். பிறர் கையிலும் வைத்தார். அது அவரைச் சுட வில்லை. யான் எட்டு முறை நெருப்புத் தணலை கையில் வைத்திருந்தேன். யான் கையை முகத்துக் கருகில் கொண்டுபோனபோது வெப்பம் முகத்தில் வீசிற்று. சில சமயங்களில் கண்ணுக்குப் புலப்படக்கூடிய கைகள் வந்து எழுதுகின்றன. கண்ணுக்குத் தெரியும்படியும், தெரியாமலும் வந்த ஆவிகள் நிழற்படம் பிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆவிகளைப் பார்த்து அவைகள் மூலம் தூரத்திலுள்ள செய்திகளை அறிந்திருக்கிறார்கள். அவை கூறிய வருங்காரியங்கள் உள்ளவாறு நிகழ்ந்தன. ஆவிகளுடன் பேசக்கூடிய வர்கள் பெரிய விரிவுரைகளையும் கட்டுரைகளையும் வரைந்திருக்கிறார்கள். நீதிபதி எட்மொண்ட்(Judge Edmond) என்னும் அமெரிக்கர் இவ் வாராய்ச்சி யில் பெரிய ஊக்கம் கொண்டிருந்தார். அவரது மகள் கலாசாலைக் கல்வி அதிகம் பயிலவில்லை. ஆயினும் மயக்க நிலையை அடையும்போது அவள் தான் அறியாத பல மொழிகளில் பேசினாள். அவள் கிரேக்க மொழியையும் திருத்தமாகப் பேசியிருக்கிறாள்.
நீ யார்
இவ்வுடலை விட்ட பின் நீ வாழ்வதை நம்பினால் இவ் வுடலோடு சம்பந்தப்பட்டிருக்கும்போது உண்டாகும் துயரங்களை நினைந்து நீ பரிகாசம் செய்வாய். அழிவில்லாத நீ இவைகளுக்கு எல்லாம் மேற்பட்டவன். இவ் வுலகில் நிகழும் சுக துக்கங்களெல்லாம் உனது அனுபவங்கள் அல்லது பரீட்சைகள். மரணத்துக்குப் பின் நாம் வாழ்வதை ஆராய விரும்பினால் நாம் பின்வரும் கேள்விகளைக் கேட்கவேண்டும். நாங்கள் ஏன் வாழ்கின் றோம்? எங்கிருந்து வந்தோம்? எங்கு செல்கின்றோம்? நாங்கள் என்றால் என்ன? இவ் வுடல் மனிதனா? அல்லது அவனுக்கு மனமும் ஆவியும் இருக்கின்றனவா?
இவ் வுலகில் தோன்றிய பெரிய அறிவாளிகளாகிய புத்தர், சொராஸ்ரர், பிளாட்டோ, சென்போல், யேசு போன்றவர்கள் எல்லாம் மனிதன் உடல் உயிர் ஆவிகளோடு கூடியவன் என்று கூறியிருக்கிறார்கள். இக்காலத்திலும் வெளிப்படையான இவ் வுண்மையை அறிஞர் மறுக்கவில்லை. உடலில் இம் மூன்றும் வெளிப்படையாக விருக்கின்றன. உடலென்றா லென்ன? அது உயிரும் ஆவியும் உறையும் வீடு. இவ் வீட்டைவிட்டு அவை பிரிந்து செல்வதை மரணம் என்கிறோம். அது நாங்கள் களைந்து எறிந்துவிடும் உடை போன்றது. உயிரென்பது என்ன? பெண் அல்லது ஆண் என்பதே உயிர். இது இறந்த பின் வாழ்வது; ஒழுக்க சம்பந்தமாக அடைந்த வளர்ச்சி களை இவ் வுடலோடு சம்பந்தப்பட்டிருக்கும்போது தன்னைப்போன்ற பிறருக்குக் காட்டுவது.
இவ் வுயிரை உடம்பு செய்வது போல் உணர்த்துவதும் பிடித்திருப் பதுமே ஆவி. அது எல்லா உயிர்களுக்கும் பின்னால் இருப்பதும் அழிக்க முடியாததுமாகிய ஆற்றல். ஆவி என்பது சடத்தை உயிருடன் இருக்கச் செய்யும் ஆற்றல் அல்லது விசையாகும். ஆவியின் சத்தி உடல் மனங்களி லிருந்து உள்ளுக்கிழுக்கப்படும்போது மனிதன் இறந்துபோகின்றான். அப்பொழுது அவன் உயிர்ப்புள்ள ஆவியோடு அடுத்த உலகை அடை கின்றான்.
இப்பொழுது மனிதன் அழியாதவன் என்று நாம் சான்றுப்படுத்த முடியாது. அவ் வுலகிலுள்ள ஆவித் தலைவர்கள் அவ்வுலகிலிருந்து வேறு மேல் ஆவி உலகங்களுக்குச் செல்வோர் இறக்கின்றனர் என்று கூறுவதை நாம் அறிவோம். இதனால் நாம் அனுமானிப்பது மந்தமான இயக்கத்தி லிருந்து படிப்படியே மேலான இயக்கமுள்ள உலகங்களை நாம் இறந்து அடைகின்றோம் என்பதே.
எங்களுக்கு இருக்கின்ற இவ் வுடல் ஒன்று மாத்திரம் உள்ளதா? இல்லை. சதையும் இரத்தமுமல்லாத வேறு நுண்ணிய சடப்பொருளால் ஆன காற்றுப் போன்ற ஒரு உடலுமுண்டென்று ஆராய்ச்சியாளர் கூறுகின் றனர். இவ்வுடலையே நாங்கள் ஆவி என்கின்றோம். மரண காலத்தில் அது பருஉடலைவிட்டு வெளியேறுகின்றது. அப்பொழுது பருஉடல் அழிந்து போகின்றது.
உயிர் இக் காற்றுமயமான உடலுள் உறைந்து, மரணத்துக்குப் பின் செல்லும் உலகை அடைகின்றது. மரணத்துக்குப் பின் உயிர்கள் செல்லும் உலகங்கள் பல. இறந்தபின் உயிர் வெளியேறும் காற்றுமயமான உடலே சிலருக்குத் தோற்றப்படுகின்றது. உயிரைத் தாங்கி நிற்கின்ற காற்றுமயமான உடலை பல காலங்களில் கோடிக்கணக்கானோர் பார்த்திருக்கின்றனர். தற் காலத்தில் அவை நிழற்படம் பிடிக்கவும் பட்டிருக்கின்றன. அவை உடலை விட்டுப் பிரிந்துபோகும் நிலைமையிலும் புகைப்படங்கள் பிடிக்கப் பட்டிருக்கின்றன.
இருவகை உடல்
உயிருக்கு இருவகை உடல்கள் உண்டு என்னும் உண்மையை மக்கள் வெகுகாலத்துக்கு முன்னரேயே அறிந்திருந்தார்கள். மரணத்துக்குப் பின் உயிர் நுண் உடலுடன் இறந்த இடத்திலோ உடல் புதைக்கப்பட்ட இடத்திலே தங்கி நிற்கின்றதென்னும் நம்பிக்கை பற்றியே இறந்தவர்கள் பொருட்டுப் பல சடங்குகள் செய்யப்படுகின்றன. பருமனாகிய இவ் வுடலில் உயிர் தங்குவதற்குத் தகுதியில்லாமல் போகும்போது, அது அவ் வுடலை விட்டுத் தனது நுண்ணிய உடலுடன் பிரிகின்றது. அவ் வுடலுடன் அது நினைத்த இடங்களுக்கோ, பிற உலகங்களுக்கோ செல்லக் கூடிய நிலையை யடைகின்றது. இவ்வகை உடலைச் “சூக்கும” உடல் என்று நம்மவர் வழங்குவர். இறந்தவர்களின் ஆவி வடிவங்களை நாய்கள், குதிரைகள், மாடுகள் என்பன எளிதிற் காணத்தக்கன என்று நம்பப்படுகின்றது. இது உண்மையென்று கொள்வதற்குரிய பல சான்றுகளும் உள்ளன. இந் நுண் ணுடல் நுண்ணிய காற்றுப் போன்ற சடப்பொருளினால் ஆனது. அவ் வுடலை ஊறுபடுத்த முடியாது. நம் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அறிந்திருந்த இவ் வுண்மையையே இன்றைய மேற்புல அறிஞரும் வெளியிட்டுள்ளார்கள்.1 ஆதர்கானன்டாயல் என்பார் தனது பரு உடலை விட்டு நுண் உடலோடு வெளியே சென்று மீண்ட ஒரு டாக்டரின் வரலாற்றைக் கூறியுள்ளார். அது வருமாறு:
“அமெரிக்க அகராதியைத் தொகுத்தவரும், ஆவி ஆராய்ச்சி யாளருமாகிய வங்க்(Mr. Funk) என்பவர் அமெரிக்க மருத்துவர் ஒருவரின் அனுபவத்தைப் பற்றிக் கூறியுள்ளார். மருத்துவர் புளோரிடா(Florida) என்னும் இடத்தில் இருந்தார். ஒரு நாள், அவருக்கு ஒருவகை மயக்கம் உண்டாயிற்று. அப்பொழுது அவர் தான் தனது உடலை விட்டு வெளியேறு வதாக உணர்ந்தார். அவர் தான் தனது உடலின் பக்கத்தே நிற்பதைக்கண்டர். அவர் தனது உடலையும் அதன் தோற்றத்தையும் பார்த்து, அது தனது உடல் என்று அறியக்கூடியதாக விருந்தது. அப்பொழுது அவருக்குத் தொலை விடத்தே வாழும் நண்பர் ஒருவரின் நினைவு வந்தது. சிறிது நேரத்தில் அவர் அந் நண்பரின் அறைக்குள் இருப்பதை அறிந்தார். நண்பரின் இடம், அமெரிக்காக் கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ளது. அவர் தனது நண்பரைப் பார்த்தார். நண்பர் தன்னைப் பார்த்ததையும் அவர் கண்டார். சிறிது நேரத்தில் அவர் தனது உடலுக்குப் பக்கத்தே மீண்டு வந்து நின்றார். அவ் வுடலுள் நுழையலாமா அல்லது விடலாமா என்னும் எண்ணம் அவருக்குத் தோன்றிப் போராடியது. அவர் அதைப் பற்றிச் சிறிதுநேரம் தனக்குள்ளேயே நினைத்துப் பார்த்தார். அவர் அசைவற்றுக் கிடந்த தனது உடலின் உட்புகுந்து உயிர் பெற்று எழுந்தார். அவர் நிகழ்ந்தவற்றைப்பற்றித் தனது தண்பருக்குக் கடிதம் எழுதியிருந்தார். நண்பர், குறித்த நாளில் தான் அவரைத் தனது அறையுள் பார்த்ததைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.”
இவ் வரலாறு, திருமூல நாயனார் இடையனுடைய உடலில் புகுந்தார்; விக்கிரமாதித்தன் பட்டி என்போர் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை அறிந்திருந்தார்கள் என வழங்கும் பழங்கதைகளை மிக இது ஒத்திருக் கின்றது.
உடலைவிட்டு உயிர் தனது ஆவி உடலோடு பயணஞ்செய்து, மறு படியும் மீண்டு வந்ததைக் குறிக்கும் வரலாறுகள் உள்ளன. இதற்கு எடுத்துக் காட்டாக இன்னொரு நிகழ்ச்சியை இங்குத் தருகின்றோம்.
“யோசேப் கொவ்வி என்பவரின் மனைவிக்கு நோய் கண்டது. அவள் தந்தை வீட்டுக்குக் கொண்டு போகப்பட்டாள். அவ் வீடு கணவன் வீட்டிலிருந்து ஒன்பது மைலுக்கு அப்பால் உள்ளது. அவள் 1691ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4வது நாள் மரணமானாள். இறப்பதற்கு முன் அவர் தனது இரண்டு பிள்ளைகளைக் காண ஆவல் கொண்டிருந்தாள். அவள் தனது விருப்பத்தைக் கணவனுக்குத் தெரிவித்தாள். பயணம் செய்வதற்கு ஏற்ற உடல் நிலையில் அவள் இல்லை என அவன் கூறினான். அன்று இரவு ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் இடையில் அவள் ஒரு வகை மயக்கம் அடைந்தாள். அவளுடன் அந் நேரம் இருந்த ரேணர் என்பவள் பின் வருமாறு கூறினாள். ‘அவளுடைய விழிகள் ஒரே பார்வையாக விருந்தன; வாய் மூடி யிருந்தது. ‘நர்ஸ்’ தனது கையை அவள் வாய்மீதும் மூக்கின்மீதும் வைத்துப் பார்த்தாள்; மூச்சு வரவில்லை. நோயாளி மயக்கத்தில் இருக்கின் றாளோ, இறந்துவிட்டாளோ என்று கூறமுடியவில்லை என்று சொன்னாள். நோயாளி மயக்கம் தெளிந்து எழுந்தவுடன், தான் தனது பிள்ளைகளைப் பார்த்து வந்ததாகக் கூறினாள். அப்படியிருக்க முடியாது; நீ படுக்கையில் இருக்கிறாய் என்றேன். நித்திரை யாயிருந்தபோது நான் பிள்ளைகளைப் பார்த்து வந்தேன் என்றாள்.’
“பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அலக்சாத்ரின் விதவை யாகிய ‘ஆயாள்’ கூறியது வருமாறு; ‘இரவு இரண்டு மணிக்கு முன்பு மேரி என்பவள், பிள்ளைகளில் ஒன்று கிடத்தப்பட்டிருந்த அடுத்த அறையி னின்றும் நான் இருந்த அறைக்குள் வந்தாள். அங்கு அவளது இளைய பிள்ளை கிடத்தப்பட்டிருந்தது. அவளுடைய உதடுகள் பேசுவது போல அசைந்தன. ஆனால் சத்தம் எதுவும் வரவில்லை. அவ் வடிவம் இங்குப் பதினைந்து நிமிடம் வரையில் தங்கிற்று’ இவ் வுண்மையை அவள் அதிகாரிகள் முன்னிலையில் சத்தியம் செய்து கூறினாள். அடுத்த நாள் மேரி இறந்து விட்டாள்.1”
இறந்தவரின் ஆவி அவர் இறந்து சிறிது நேரத்துள் தொலைவிலுள்ள நண்பர் அல்லது உறவினருக்குத் தோற்றப்படுவதைப்பற்றிய செய்திகள் பல வுள்ளன. இங்குச் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகின்றோம்:
1. “சிறுமியாயிருக்கும்போது நான் எனது சகோதரியோடு படுத்து நித்திரை கொள்வது வழக்கம். ஒரு நாள் இரவு நாங்கள் படுத்தபின், விளக்கை அணைத்தோம். அடுப்பில் மெதுவாக எரிந்துகொண்டிருந்த நெருப்பின் வெளிச்சம் அறைக்குள் தெரியக்கூடியதாக இருந்தது. நான் அடுப்பைப் பார்த்தபோது ஒருவர் இருந்து குளிர் காய்ந்துகொண்டிருந்தார். அடுத்த கிராமத்தில் பெரிய குருவாயிருந்த எனது மாமனாரின் தோற்றத்தை அவ் வடிவம் ஒத்திருந்தது. உடனே நான் என்னுடைய சகோதரியை எழுப்பி அவ் வடிவத்தைக் காட்டினேன். அவளும் அவ் வடிவம் எங்கள் மாமனாரைப் போல் இருப்பதைக் கவனித்தாள். நாங்கள் பயந்து ‘உதவி! உதவி! என்று சத்தம் இட்டோம். அடுத்த அறையில் நித்திரை கொள்ளும் எங்கள் தந்தை படுக்கையினின்றும் குதித்து, மெழுகு திரியுடன் ஓடிவந்தார். உடனே அவ் வுருவம் மறைந்தது. எங்கள் மாமனார், கடந்த மாலையில் இறந்து விட்டார் என்னும் செய்தியைக் கொண்ட கடிதம் அடுத்த நாள் காலை எங்களுக்குக் கிடைத்தது.”
2. n.j.s. என்பவரும் F.L. என்பவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்தார்கள். இவர்கள் எட்டு ஆண்டுகளாக நண்பர்களாயிருந்து வந்தனர். 1883ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி திங்கட்கிழமை F.L. என்பவர், உடல் நலம் இல்லாதிருந்தார். மார்ச் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை N.J.S. என்பவர் தலைவலியால் வருந்தினார். அவர் சாய்வு நாற்காலியிற் சாய்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தனது நண்பர் F.L. தனக்கு முன்னால் நிற்கக் கண்டார். அவர் தொப்பியில் கறுப்பு நாடாக் கட்டியிருந் தார். கையில் தடி வைத்திருந்தார். அவர் N.J.S. என்பவரைக் கூர்ந்து பார்த்துவிட்டு மறைந்து விட்டார். அப்பொழுது N.J.S. ஒரு ஆவி வந்து சென்றதாகத் தனக்குள் எண்ணினார். அவர் உடல் சில் என்று குளிர்ந்தது. மயிர்கள் கூச்செறிந்தன. அவர் மனைவியை அழைத்து நேரம் என்ன என்று கேட்டார். அவள் ஒன்பது மணிக்குப் பன்னிரண்டு நிமிடங்கள் இருப் பதாகக் கூறினாள். அப்பொழுது அவர் F.L. இறந்துவிட்டார் என்று அவளுக்குத் தெரிவித்தார். அப்படி இருக்கமுடியாது என்று அவள் அவருக்குத் தைரியங் கூறினாள். அவர் தான் சொல்வது உண்மை எனக் கூறினார். அடுத்த நாள் F.L. என்பவரின் சகோதரன் சனிக்கிழமை 9 மணிக்குப் பதினைந்து நிமிடம் இருக்கும்போது இறந்துவிட்டார் எனக் கூறினார்.1”
ஆவி உடல்
2மரணகாலத்தில் உயிரைத் தாங்கி ஒருவனை அல்லது ஒருத்தியை மறு உலகத்துக்குக் கொண்டு செல்வது காற்றுமயமான இவ் வுடலாகும். நான் பகல் நேரத்திலும் இரவிலும் ஆவிகளைப் பார்த்திருக்கிறேன். நான் அவை களுடன் பேசியுமுள்ளேன். நான் அவைகளின் கையைப் பிடித்துப் பரிசித் திருக்கிறேன். எனக்கும் வேறு பலருக்கும் முன்னிலையில் அவை பரு உடல்போல் வயிரமடைந்து தோற்றமளிப்பதையும் பார்த்திருக்கிறேன். பின்பு அவை படிப்படியே உருவம் கலைந்து மறைந்துவிட்டன.
பல முறைகளில் இறந்தவர் ஆவி வடிவில் நின்று சொற்பொழிவுகள் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அப் பேச்சுகளில் இவ் வுலக மறு உலக அறிவுக்குரிய செய்திகள் அடங்கியுள்ளன. இவ் வுடலோடு கூடிய உயிர்கள் செய்யமுடியாத பல செயல்களை அவை புரிவதையும் நான் பார்த்திருக் கிறேன்.
நான் ஒரு எகிப்திய ஆவியோடு பழகியிருந்தேன். அதன் மூலம் நான் பல ஆராய்ச்சிகளை நிகழ்த்தினேன். சிவப்பு வெளிச்சமுள்ள அறை யில் நிகழ்ந்தது வருமாறு. அறையிலிருந்த ஒரு பெண் கையில் வைத் திருந்த மின்சாரச் சூளை(Electric torch) ஆவி தனது கையால் எடுத்துத் தனது முகத்துக் கெதிரே பிடித்தது. எங்கள் காலுக்கு இரண்டு அல்லது மூன்றடி தூரத்தில் வெள்ளை முகில்போன்ற தோற்றம் அறையிலிருந்த ஒன்பது பேருக்கும் தெரிந்தது. இம் மேகம் 18 அங்குலச் சதுரமுடையதா யிருந்தது. அம் மேகத்திலிருந்து நான் பழகியிருந்த ஆவியின் முகம் சிறிது சிறிதாக வெளிப்பட்டுத் தெரிந்தது. கண் மூடப்பட்டிருந்தது. வெள்ளைச் சலவைக் கல்போல் முகம் வெண்மையாயிருந்தது. மூக்கும் கண்களும் உயிருள்ளவர் களின் கண்கள் போன்றிருந்தன. அது மூன்று முறை வெளிச்சத்தைத் தனது முகத்துக்கு நேரே பிடித்தது. நாம் மூன்று முறையும் அதன் முகத்தைத் தெளிவாகப் பார்த்தோம். சிறிது நேரத்தில் ஒருகை எனது இடது கையையும் இடது முழங்காலையும் தொடுவதாக உணர்ந்தேன். முதலில் அது குளிராக விருந்தது. விரைவில் அது வெப்பமாகவும் மனிதக் கை போலவும் மாற்ற மடைந்தது. அதன் விரல்கள் வெப்பமாக விருந்தன. அவை உயிருடைய வர்களின் விரல்போல் அழுத்தமும் வளையக்கூடியனவுமாயிருந்தன. எங்களிற் சிலருக்கு ஆவியின் கைகளிலிருந்து அரிய வயிரக் கற்கள் கிடைத்தன. எனக்கு அழகிய வயிரம் ஒன்று கிடைத்தது. இன்னொருவருக் குக் கறுப்புக் கல் கிடைத்தது. இன்னொருவருக்குச் சிவப்புக் கல் கிடைத்தது.
1934ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ஆம் திகதி சிவப்பு முகில் என்னும் என்னோடு வாலாயப்பட்ட எகிப்திய ஆவி வந்தது. அறையில் பதினான்கு பேரிருந்தோம். அறையில் எவராவது எப்பொருளாவது நுழைய முடியாதபடி எல்லாப் புறங்களும் மூடப்பட்டிருந்தன. ஆவிகள் தடித்த வடிவங் கொள்ளவும் நுண்ணிய வடிவங் கொள்ளவும் முடியுமென்பதை அத்தாட்சிப்படுத்த விரும்பினேன். அடுத்த தோட்டத்தில் கூட்டுக்குள் இருக்கும் பறவைகளுள் ஒன்றைப் பூட்டப்பட்டுள்ள எங்கள் அறைக்குள் கொண்டு வரும்படி சொன்னேன். உடனே ஆவி அச் சிறிய பறவைகளி லொன்றை உலோகத் தகடு ஒன்றின் எதிரில் எங்களுக்குக் காட்டி எங்கள் எல்லோரையும் அதைப் பிடித்து அதன் இறக்கைகளைத் தட்டும்படி விட்டது. அப்பறவை மயக்க நிலையில் வெப்பமாக விருந்தது. அதன் வாலிலிருந்து சில இறக்கைகள் பிடுங்கப்பட்டன. இப் பரிசோதனையின் போது ஒருவரும் வெளியே செல்லவில்லை. அறைக்கு ஒரு கதவு மாத்திர மிருந்தது. பின்பு பறவை கூட்டில் விடப்பட்டது.
ஆவி உலகில் ஆவிகள் மனிதரைப்போலக் கேட்கவும் கூடுமென்ப தற்கு எனது பரிசோதனைகளில் ஒன்று போதிய சான்றாகும். ஒரு நாள் சாயங்காலம் நான் மாடியில் நின்று எனது மனைவியோடு சில அந்தரங்க கருமங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அதனைக் கேட்பதற்கு அவ்விடத்தில் வேறு யாரும் இல்லை. சிலமணிநேரம் கழித்து நான் சில மைல்களுக்கு அப்பால் இருந்தபோது எனது வாலாயமான ஆவி நண்பன் நான் கூறியவற்றைச் சொல்லி எனக்கு ஆறுதல் அளிக்க வந்தான். நாங்கள் பேசிக்கொண்டிருந்த கருமத்தை எவரும் அறியமாட்டார்கள். அது ஒருவரின் சிக்கலான கருமத்தைப் பற்றியதாகும். இவ்வகையான நிகழ்ச்சிகளைத் தொலைவிலுணர்தல் என இக் கால ஆராய்ச்சியாளர் கூறுவதை நிறுத்தி விட்டனர். நானும் வேறு பலரும் அப்பொழுது மனதில் நினையாத பல கருமங்களைப் பற்றிய செய்திகள் புலப்படாத உலகினின்றும் வந்தன. இவற்றை தெலிபதி என்று கூறமுடியாது.
ஆவிகள் காற்றுமயமான தமது உடலை மனித உடல்போல ஆக்கிக் கொண்டு தோன்றவும் முடியுமென்று சொல்லப்படுகிறது.
ஆவிகளின் வடிவம்
ஆவிகள் இறந்தவரின் வடிவிற் காணப்படுகின்றன. அவைகளின் தலைகளும் மேற் பக்கங்களும் தெளிவாகத் தெரிகின்றன. கீழ்ப்பாகங்கள் சிறிது சிறிதாகத் தேய்ந்து நீராவிபோலக் கண்ணுக்குத் தெரியாதவா றிருக் கின்றன. அவைகளின் கால் ஒருபோதும் கண்ணுக்குத் தெரிவதில்லை. 1தெய்வங்களின் கால் நிலத்திற் படிவதில்லை. அவை கண்இமை கொட்டுவ தில்லை எனத் தமிழ் நூல்களில் கூறப்படுவது, மேல் நாட்டறிஞர் ஆராய்ந்து கூறுபவைகளை நன்கு ஒத்துள்ளன. விலங்குகளின் ஆவிகள் விலங்கு களைப் போலவே உள்ளன. இதனை விளக்க ஒரு எடுத்துக்காட்டுத் தருகின் றோம். பின்வருவது ஆவிகள் தொடர்பான பொருளுரைகள் அடங்கிய ஒரு நூலிற் காணப்படுகின்றது.
“ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் இரவில் சிறிது நேரம் கழித்து வந்துகொண்டிருந்தார். அவருக்குக் கிராமத்தில் ஒரு வயல் நிலம் இருந்தது. அவர் தனது வீட்டுக்குச் சிறிது தூரத்திலுள்ள ஒரு வயலில் கழுதை பயிரை மேய்ந்துகொண்டு நிற்பதைக் கண்டார். அவர், அதைப் பிடித்துக் கொண்டு வந்து வீட்டில் கட்டிவைத்து, அதன் சொந்தக்காரன் வந்து கேட்கும்போது அதனைக் கொடுக்கலாம் என்று நினைத்தார். அவர் கழுதையைக்கொண்டு வந்து தொழுவத்தில் கட்டப்போகும்போது அது மாயமாக மறைந்து போயிற்று. அவர் உடனே பயமடைந்து தனது தமையன் வீட்டுக்குச் சென்று அவரை நித்திரையினின்றும் எழுப்பி நிகழ்ந்தவற்றைக் கூறினார். காலையில் வயலிற் சென்று பார்த்தபோது பயிர் மேயப்படாமல் அப்படியே இருந்தது.
பேய்கள்
இறந்தவர்களின் ஆவிகள் சில காலம் இவ்வுலகத்தோடு சம்பந்தப் பட்டு நிற்கின்றன. தற்கொலை புரிந்தவர், அபாயத்தினாற் கொல்லப்பட்டவர், அல்லது மற்றவர்களாற் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள், மரணம் அடைந்த இடத்தில் சிறிது காலங்களுக்குத் தங்கி நிற்கின்றன. இவைகள் இறந்த இடத்தில் ஆவி வடிவில் தோன்றுதலையும் பலருக்குத் தீமை விளைத் தலையும், வீடுகளில் தட்டுதலையும் பொருள்களை எடுத்து எறிதலையும் போன்ற செயல்களைப் புரிகின்றன. இவை போன்ற ஆவிகளையே, மக்கள் முனிகள் பேய்கள் எனக் கூறுவர். இவை பேய்கள் எனவும் படும். கெட்ட ஆவிகள் இவ்வுலகில் சில காலம் தங்கி நிற்கின்றன. அவை மக்களைப் பிடித்தால், அவர் தனது சொந்த அறிவோடு இருப்பதில்லை. பேயாற் பிடிக்கப்பட்டவரின் கையில் நெருப்புக் கொளுத்தி வைத்தால் அது அவரைச் சுடாது.
1“சீனர் ஆவிகளுக்கு மிக அஞ்சுவர். அவர்கள், கெட்ட ஆவிகள் நல்ல ஆவிகள் என, ஆவிகளை இரண்டு வகையாகப் பிரிப்பர். நல்ல ஆவி களைக் குறித்து அவர்கள் சிறிதும் அஞ்சுவதில்லை. கெட்ட ஆவிகளுக்கு அவர்கள் பெரிதும் அஞ்சுவர். இவை இருண்ட இடங்களில் தங்கியிருந்து காரணமின்றி வழிப்போக்கருக்குத் துன்பஞ் செய்கின்றன. ஒருவரால் துன்புறுத்தப்பட்டவரின் ஆவி மிகவும் அஞ்சத்தக்கது. வாங்கிய கடனைக் கொடுக்காது ஏய்க்கும் ஒருவனைப் பழிவாங்குவதற்குக் கடன் கொடுத்தவன் அவன் வீட்டு வாயிலில் நஞ்சு தின்று இறப்பான். கொடுமையாக நடத்திய மாமியாரைப் பழிவாங்குவதற்கு மருமகள் தூங்கி இறப்பாள்”. இங்குக் கூறியவை இறந்த ஆவிகளே பேயாக மாறுகின்றன என்பதற்குப் போதிய சான்றுகளாகும்.
ஆவிகளைப் பற்றிய சில செய்திகள்
இங்குக் கூறப்படும் செய்திகள், ஆவிகளைப் பற்றிய நூல்களி லிருந்து எடுக்கப்பட்டவை. எடுத்தாளப்பட்ட நூற் பெயர்கள் அடிக்குறிப் பில் காட்டப்பட்டுள்ளன.
1. “1885ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் ஒருநாள் யான் மடேரியா (Madeiria) என்னும் இடத்திலே ஒரு விடுதியில் படுத்து உறங்கினேன். நிலவு வெளிச்சம் இருந்தது . சன்னலுக்கு வலை போடப்பட்டிருந்தது. யாரோ ஒருவர் அவ் வறைக்குள் இருப்பதை நான் உணர்ந்தேன். 25 வயதுள்ள வாலிபன் நிற்பதைக் கண்டேன். அவன் நான் படுத்திருப்பதற்கு நேராகத் தனது வலது கை விரலை நீட்டிக் காண்பித்தான். நான் உடனே எழுந்து என்ன வேண்டுமென்று கேட்டேன். யாதும் விடை வரவில்லை. மறுமொழி சொல்லாமையால் நான் அவனைக் கையால் அடித்தேன். ஆனால், கை எட்ட வில்லை. யான் படுக்கையை விட்டுக் குதிக்க முயன்றபோது, அவ் வுருவம் சன்னல் வழியாக மறைந்துவிட்டது. அவ் வறையினுள் மரணமடைந்த ஒருவனின் ஆவி வருகின்றதென்று பின்பு விசாரணையால் அறிந்தேன்.”2
2. “எனது நண்பர் ஒருவர், ஒரு முறை பெரிய சத்தம் ஒன்று, சுவரிலிருந்து வருவதைக் கேட்டுப் பயம் அடைந்தார். வெளிச்சுவருக்குப் பக்கத்தில் வேறு கட்டடம் எதுவும் இல்லை. இந் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் ஒருநாள் மாலை 9 மணியளவில் உண்டாயிற்று, வெளியே ஒருவரும் காணப்படவில்லை; வெளியே நல்ல வெளிச்சம் இருந்தது. உள்ளேயிருந்து சத்தம் வருவதற்குரிய காரணம் ஒன்றும் இருக்கவில்லை அச் சத்தத்தைக் கேட்ட நண்பருக்குப் பயத்தினால் காய்ச்சல் உண்டாகிவிட்டது. இச் சத்தம் உண்டாவதற்கு இருபது நிமிடத்துக்கு முன், நண்பருடைய சகோதரர் அபாயத்துக்குட்பட்டு மரணமானார் எனத்தெரிந்தது.1”
3. நாற்பத்தெட்டு ஆண்டுகளின்முன் செந்தனாக்(Sentanac) என்னும் இடத்தில் பீற்றோ என்னும் உபதேசியார் மரணமானார். அதன்பின்பு, தேவாலயத்தில் யாரோ நாற்காலிகளைத் தூக்குவது போலவும், நடப்பது போலவும், மூக்குத்தூள் சிமிழைத் திறப்பது போலவும், மூக்குத்தூளை மூக்கி லிட்டு உறிவது போலவும் இராக்காலங்களில் சத்தங்கள் கேட்டன. இவ்வாறு நீண்டகாலம் நடைபெற்றது. உபதேசியாரின் ஆவியே அவ்வாறு செய் கின்றதெனச் சிலர் கூறினார்கள் அதனைக் கேட்டுக் கிராமத்திலுள்ளவர்கள் பரிகாசம் செய்தார்கள். தேவாலயத்தின் அயலே குடியிருந்த அந்தோனி, கெல்லி என்னும் இருவர் இச் சத்தங்கள் உண்டாவதன் காரணத்தை நேரில் அறிய விரும்பினார்கள். ஒரு நாள் இருவரும் துப்பாக்கியையும் கோடாரியை யும் கொண்டு இராப்பொழுதைத் தேவாலயத்திற் கழிக்கச் சென்றார்கள். அவர்கள் சமையலறையில் தீமூட்டி எரித்துக் குளிர்காய்ந்தபின், கிராமத்த வர்களின் அறியாமையைக் குறித்துப் பேசிவிட்டுப் படுத்து நித்திரை யானார்கள். அப்பொழுது அவர்களுக்கு எதிரேயுள்ள அறையில் சத்தம் கேட்டது; நாற்காலிகள் அசைந்தன. யாரோ அங்கும் இங்கும் நடந்து செல்லும் ஓசைகேட்டது. பின்பு ஒருவர் படிக்கட்டில் இறங்கிச் சமைய லறைக்குச் சென்றார். யார் வந்தாலும் வெட்டுவதற்கு ஆயத்தமாக அந்தோனி கோடாரியை மறைத்து வைத்துக்கொண்டு சமையலறைக் கதவுப் பக்கத்தே நின்றான். கெல்லி துப்பாக்கியைத் தோளோடு அணைத்து வைத்துக் கொண்டு சுட ஆயத்தனாக நின்றான். சமையலறைக்குச் சென்றவர் மூக்குத் தூளில் ஒரு சிட்டிகை எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சினார். சமைய லறைக்குச் செல்வதற்குப் பதிலாக ஆவி கூடத்துக்குச் சென்றது. அங்கே அது உலாவிக்கொண்டு நின்றது. இருவரும் தமது ஆயுதங்களுடன் கூடத்துக்குச் சென்றார்கள். அங்கு ஒன்றும் காணப்படவில்லை. அவர்கள் மாடிக்குச் சென்று எங்கும் தேடிப்பார்த்தார்கள். நாற்காலிகள் எல்லாம் அப்படியே இருந்தன. அப்பொழுது அவர்கள் இறந்தவரின் ஆவியே சத்தம் செய்கின்றதென்னும் முடிவுக்கு வந்தார்கள். பீற்றோவுக்குப் பின் மொன்சூர்பெரி என்பவர் உபதேசியாராக வந்தார். மேரி கல்வெற் என்பவள் அவரது வேலைக்காரி. ஒருநாள் அவள் சமையல் ஏனங்களைச் சுத்தஞ் செய்து கொண்டிருந்தாள். எசமானர் அடுத்த கிராமத்துக்குப் போயிருந்தார். அப்பொழுது ஒருவர் பேசாது அவளுக்கு முன்னே செல்வதைக் கண்டாள். அப்பொழுது அவள் அவரைத் தனது எசமானர் என்று கருதி, “என்னைப் பயப்படுத்த நினைக்கவேண்டாம். இறந்துபோன பீற்றோ திரும்பி வந்து விட்டாரென நான் ஒரு போதும் நினைக்கமாட்டேன்” என்று சொன்னாள். தனது எசமானர் என்று கருதியவர் பேசாததினால் அவள் உருவம் சென்ற திசையை நோக்கினாள். ஒன்றையும் காணவில்லை. அவள் பயம் அடைந்து உடனே அந் நிகழ்ச்சியை அயலவர்களுக்குச் சொன்னாள்.”*
4. “கீழ்வரும் நிகழ்ச்சி 1812ஆம் ஆண்டு எனது தந்தையின் வீட்டில் நிகழ்ந்தது. ஒருநாள் இராப் பத்து மணியளவில் எனது தாய் சமையலறை யில் யாதோ வழக்கமல்லாத சத்தத்தைக் கேட்டு விழித்தெழுந்தாள். அவள் உடனே எனது தந்தையை எழுப்பிச் சமையலறைக் கதவை மூடிவிட்டு வரும்படி சொன்னாள். சமையலறையில் நாய் புகுந்து சத்தம் செய்கின்றதென அவள் நினைத்தாள். கதவைத் தாழிட்டதைப்பற்றித் திடமாயிருந்த தந்தை அவள் கேட்ட சத்தம் கனவாயிருக்கலாம் என நினைத்தார். பத்து நிமிங் கட்குப்பின் மறுபடியும் சத்தம் கேட்டது. அப்பொழுதும் எனது தாய், தந்தையை எழுப்பினாள். அப்பொழுதும் அவர் இதனைக் கருத்திற்கொள்ள வில்லை. ஆனால் நித்திரை கொள்ளாது அவர் எழுந்திருந்தார். அப்பொழுது சமையற் பாத்திரங்களை நாய் தட்டி விழுத்துவது போன்ற சத்தம் கேட்டது. உடனே அவர் வெளிச்சத்தை எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றார். எல்லாம் இருந்தபடியே இருந்தன. அவர் படுத்துச் சிறிது நேரத்துக் கெல்லாம் சமையலறையில் இருந்து பெரிய இரைச்சல் கேட்டது. உடனே அவர் வீட்டு அறைகள் எல்லாவற்றிலும் சென்று பார்த்தார். சத்தம் ஓயாது வந்து கொண்டிருந்தது. பின்பு அவர் வெளியே படுத்திருந்த வேலை யாட்கள் எல்லாரையும் எழுப்பி வீடு முழுவதையும் ஆராய்ந்து பார்த்தார். எவரையும் காண முடியவில்லை. ஆனால் சத்தம் மாத்திரம் ஓயவில்லை. இப்பொழுது சத்தம் சாப்பிடும் அறைக்குள் கேட்டது. மேலே இருந்து இருபது அல்லது முப்பது இராத்தல் பாரமுள்ள கல் விழுவதுபோற் சத்தம் கேட்டது. இச் சத்தத்தைக் கேட்ட அயலார் பலர் வந்து சேர்ந்தார்கள். சத்தம் காலை நாலு மணியளவில் ஓய்ந்தது. பகல் ஏழு மணிக்கு ஒருவர் வீட்டுக்கு வந்தார். எங்கள் உறவினரில் ஒருவர், இரவு பத்துமணிக்கும் பதினொரு மணிக்கும் இடையில் இறந்தார் என்றும் இறப்பதன் முன் தனது சிறுவனின் பாதுகாப்புப் பொறுப்பை எனது தந்தை ஏற்கவேண்டுமென விரும்பினா ரென்றும் அவர் கூறினார். எனது தந்தை அதற்கு மறுத்துவிட்டார். எனது தாய் இக் காரணத்தினால் இச் சத்தம் உண்டாயிருக்கலாம் என நினைத்து எனது தந்தையை இறந்தவரின் விருப்பத்துக்கு இணங்கும்படி வேண்டி னாள். அவர் அதற்கு இணங்கவில்லை. சத்தம் மறுபடியும் கேட்டால் தான் அதற்கு இசைவதாகக் கூறினார். அவர் அச் சத்தம் யாரோ தனது எதிரிகளால் செய்யப்பட்டதென எண்ணியிருந்தார். அவர் இரண்டு தடியர்களை வீட்டில் படுத்து உறங்கும்படி செய்தார். அடுத்த இரவின் நடுச்சாமத்தில் முந்திய இரவிலும் பார்க்கப் பலத்த சத்தம் உண்டாயிற்று. எனது தந்தை எழுந்து இருவருக்கும் இதனை அறிவித்தார். சத்தத்தைக் கேட்ட இருவரும் பயத்தி னால் எழும்ப மறுத்தார்கள். அவர்களின் உடல் முழுமையும் வியர்வையால் நனைந்தது. எனது தந்தை வேலையாட்களுடன் அறைகளை எல்லாம் ஆராய்ந்து பார்த்தார். ஒருவரும் காணப்படவில்லை. பின்பு அவர் எனது தாயின் எண்ணத்துக்கு இசைந்து இறந்தவரின் எண்ணத்தை நிறைவேற்றினார்.1
5. 1855ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆலுஸ்(Aulus) என்னும் வெந்நீர் ஊற்றுக்களின் சொந்தக்காரன் மரணமானான். உடனே அங்கிருந்த வீட்டில் வழக்கமல்லாத சத்தங்கள் கேட்டன. அறையிலுள்ள கணக்குப் புத்தகங்களைப் புரட்டும் சத்தம் கேட்டது. மெழுகுதிரியைக் கொளுத்திப் பார்த்தபோது அங்கு யாரும் காணப்படவில்லை. சில சமயங்களில் ஆள் நடப்பது போலவும், மாடிப்படியில் ஏறுவது போலவும், கட்டிலைத் தூக்குவது போலவும், நிலத்தில் சுத்தியால் அடிப்பது போலவும் சத்தங்கள் கேட்டன. பகல் நேரங்களிலும் இவ் வகைச் சத்தங்கள் உண்டாயின. ஒரு நாள் சுங்க அதிகாரி ஒருவர், மலையிலிருந்து வரும்போது கட்டடம் விழப்போவது போன்ற பயங்கரமான சத்தம் ஒன்றைக் கேட்டார். காவற்காரனின் அறைக்குப் பக்கத்தில் பெண் ஒருத்தி ஒரு நாள் படுத்திருந்தாள். கண்ணுக்குப் புலப் படாத ஒரு கை அவளின் படுக்கைத் துணியை இழுத்தது. உடனே அவள் அறையைவிட்டு வெளியே ஓடிச் சென்றாள். 1872 வரை இவ்வாறு நடந்து பின்னர் இக் குழப்பங்கள் குறைய ஆரம்பித்தன.2
இயக்கம் (VIBRATION)
நீ தூரத்திலுள்ள நண்பனொருவனோடு பேச விரும்பும்போது நீ தெலிபோன் கருவியைத் துணைக்கொண்டு பேசுகிறாய். அவ்வியந்திரம் ஒலியைக்கொண்டு செல்வதால் நீ அவ்வாறு செய்கிறாய். கம்பி மூலம் ஓசையைக்கொண்டு செல்லாத ரேடியோ மூலமும் நீ பேசலாம். நீ மறு உலகி லுள்ள நண்பனொருவனொடு பேசவிரும்பினால் நீ ஒரு மனித இயந் திரத்தைப் பயன்படுத்துகிறாய். அது மீடியம்(medium) எனப்படும். இவ்வாறு பயன்படுத்தப்படும் ஆண் அல்லது பெண் இவ்வகையான ஆற்றலைப் பெற்றிருக்கின்றார். அவர்கள் சாதாரண மக்களைவிடச் சிறப்பான ஆற்றல் பெற்றவர்கள். அவர்கள் கண்ணுக்குப் புலப்படாத உலகங்களைப் பார்க்க வும் அங்குள்ளவர்கள் பேசுவதைக் கேட்கவும்கூடிய ஆற்றலுடையவர்கள். இவ்வகையான ஆற்றல்கள் உண்டு எனபதைப் பருப்பொருள் விஞ் ஞானிகள் ஒருபோது மறுத்தார்கள். இவ்வகை ஆற்றல்கள் உண்டென்பது பலகாலங்களாகக் கிடைத்துள்ள உண்மைச் செய்திகளால் நிலை நாட்டப் பட்டுள்ளது.
ஒரு மீடியமாய் இருப்பதற்கேற்ற ஆற்றலை என்ன அளிக்கின்றது. அவர்களின் மனக்கண்ணும் காதும் அளவுகடந்த உணர்ச்சியுடையனவாய் மற்றவர்கள் அறிய முடியாத இயக்கங்களை அறிகின்றன. சுருங்கக் கூறின் அவை மனித பூதக்கண்ணாடிகளும் மனிதத் தொலைநோக்கிகளுமாகும். அவைகளை உயர்ந்த சத்திவாய்ந்த மனித ரேடியோக்கள் என்றும் கூறலாம்.
நீ அடுத்த உலகிலுள்ள நண்பரொருவரோடு பேச விரும்பும்போது நீ மீடியத்தின் நுட்பமான கண்ணையும் காதையும் பயன்படுத்துகின்றாய். இது தெளிவான அறிவு. இதில் மயக்கந் தருவதோ துயரம் தருவதோ எதுவும் இல்லை, தொடுதலால் உண்டாகும் உணர்ச்சியும் பேச்சினால் உண் டாகும் ஒலியும் இயக்கத்தினால் பரவுகின்றன என விஞ்ஞானிகள் கூறுகின் றனர். சுருங்கச் சொல்லின் உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் இயக்கத் துக்குட்பட்டிருக்கின்றன. சில மெதுவாக இயங்குகின்றன; சில வேகமாக இயங்குகின்றன. மனிதராகிய நாம் சுருங்கிய இடத்திலுள்ள இயக்கங்களை மாத்திரம் அறியவல்லோம். ஒலிபெருக்கி தெலிபோன் கருவிகளால் நாங்கள் இயக்கங்களை அறியும் அறிவு விசாலிக்கிறது. எங்களின் அறிவுக் கெட்டாதனவும் மரணத்துக்கு அப்பாலுள்ளவுமாகிய உலகங்களின் செய்தி களை நாம் மீடியங்களைப் பயன்படுத்தி அறியலாம். எல்லா மீடியங்களின் தொழிலும் கண்ணுக்குப் புலப்படும் உலகினதும் புலப்படா உலகங்களினதும் இயக்க சம்பந்தமான தடையைத் திறந்துவிடுதலாகும்.
நாம் இறந்தவர்களின் ஆவிஉடலைப் பார்க்க முடியாமலிருப்ப தற்குக் காரணம் அவை சடப்பொருள்களாலான எங்கள் உடலிலும் பார்க்க வேகமாக இயங்குவதாலாகும். நாங்கள் பார்க்க முடியாவிட்டாலும் இவ் வாவிகள் நாம் நித்திரை கொள்ளும்போதும் விழித்திருக்கும்போதும் நமக்குப் பக்கத்தே இருக்கின்றன. அவை விஞ்ஞானிகளாலும் பொதுமக்க ளாலும் நிழற்படம் பிடிக்கப்பட்டுள்ளன. அவை எப்பொழுதும் நம்மோடு பேச எதிர்பார்த்திருக்கின்றன. பேச அதிகம் விரும்புகிறவர்கள் நாங்களல்லர்; அவையே எங்களோடு பேச விரும்புகின்றன. எங்களுக்கு உதவி புரிய அவற்றிற்கு நாம் சமயம் அளிப்பதால் அவை ஆவி வளர்ச்சி சம்பந்தமான மேல் நிலையை அடைகின்றன. ஒருவருக்கு ஒருவர் உதவி அளிக்கும் இயல்பினாலேயே எல்லா உயிர்களும் நிலைபெறுகின்றன.
ஆவி ஆராய்ச்சியாளர் அவை செய்யும் சாதாரணமல்லாத நிகழ்ச்சி களைக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாத உலகங்களைப்பற்றி அறிகி றார்கள். இறந்த ஆண்களும் பெண்களும் பேசுவதையும் அவர்கள் கேட் கிறார்கள். இவ் வாராய்ச்சிக்காரருள் ஒருவர் மீடியமாயிருப்பின் அவ்வுலகங் களில் என்ன நடக்கின்றன என்று அறிகின்றார். “நான் இவ்வுலகத்தவ ரிடையே இருப்பதிலும் பார்க்க ஆவி உலக மக்களிடையே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என்று ஒரு மீடியம் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.
தாம் ஆவிகளைக் காணாமையினால் ஆவி உலகம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். மிக வேகமாகச் சுழலும் வாள் கண்ணுக்குத் தோன்ற மாட்டாது. கண்ணுக்குத் தோன்றாவிட்டாலும் கைவிரலை நீட்டினால் அது வெட்டிவிடும். சுழலும் விசை குறைந்தவுடன் அது கண்ணுக்குப் புலப்படு கின்றது.
சில சமயங்களில் சாதாரண மக்கள் ஆவியைக் காண்கிறார்கள். இறந்தவரின் ஆவி மனிதரின் கண்களுக்குப் புலப்படும்படி தனது இயக்கத் தின் வேகத்தைக் குறைப்பதினாலேயே இது உண்டாகின்றது.
இவ்வாறு தோன்றுவதற்கு மீடியத்திடமும், கூட இருப்பவர்களிடமு மிருந்து ஒருவகை உயிர்ச் சத்தை(ectoplasm) ஆவிகள் இரவல் பெறுவது வழக்கம். எங்கள் எல்லாரிடமும் வெள்ளிய புகைபோன்ற இவ் வகைச் சத்து உண்டு. இது பலமுறைகளில் நிழற்படம் பிடிக்கப்பட்டுள்ளது.
நீ உனது இறந்துபோன தாய் அல்லது தந்தையோடு பேச விரும்பி னால் அவர்களோடு பேசவிடும்படி நீ மீடியத்தைக் கேட்கிறாய். இது ஒரு தெலிபோன் இணைப்பிலுள்ள பெண்ணை இவ்வாறு செய்வதற்குக் கேட்பது போன்றது. மீடியம் மயக்க நிலையில் அல்லது விழிப்பு நிலையி லிருந்து தனது மனத்தையும் உடலையும் நீ விரும்பியவரோடு பேசுவதற்கு இணைத்துவிடுகிறது.
ஆவிகளுடன் பேசுதல் 1
ஆவிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்வோர் ஆவிகளோடு பேசியிருக் கிறார்கள். ஆவிகளுக்கு நேரில் பேசும் ஆற்றல் இல்லை. இவை சிலர் மூலம் பேசுகின்றன. ஆவியுடன் பேசுவோர் ஒருவகை மயக்க நிலை அடைகின் றனர். அப்பொழுது கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் மறுமொழி சொல்லு கிறார்கள். எவரது ஆவி பேசுகின்றதோ அவ்வாவிக்குரியவரின் குரல் போல் பேச்சு இருக்கின்றது. சில சமயங்களில் கேட்கும் கேள்விகளுக்கு விடைகள் எழுதப்படுகின்றன. இவ்வாறு ஆவிகளுடன் பேசிய விவரங்கள் பல, புத்தகங்களாக வெளிவந்துள்ளன. எங்கள் நாட்டிலும் இது அறியப் பட்டிருந்தது. இது பல பொய்ச் செயல்களோடு கலந்திருப்பதால் உண்மை அறியமுடியாமல் இருக்கிறது. உலகில் எல்லா நாடுகளிலும் வெளிப்பாடு கூறுதலில்(oracle) நம்பிக்கை இருந்துவந்தது. வெளிப்பாடு கூறுகின்ற வனின் வாக்கு அவன்மீது தெய்வமேறிக் கூறுவதாகக் கருதப்பட்டது. “சோதிடம் சொல்லுதல்” என வாய்ப்புக் கூறுவோர் அனுமானோ, மலை யாள பகவதியோ, தொட்டியத்துச் சின்னானோ, வேறு ஒரு தெய்வமோ, தமது நாவிலிருந்து கூறுவதாகக் கூறுகின்றனர். இவையெல்லாம் ஆவி பேசுதல் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டனவே.
பேய்பிடித்தவனின் பேச்சுக்கள் பேயின் கூற்றாகவே கருதப்படு கின்றன. ஆவி பேசுதலுக்கு உதாரணமாக ஒரு யோகியின் செயலை இங்குத் தருகின்றோம்.
“1 நான் இராமானுச யோகியுடன் சிலகாலம் தங்கியிருந்தேன். எனக்கு ஒரு வயதுள்ள ஒரு மருமகன் குழந்தை இருந்தான். அவர் அக் குழந்தை யைத் தனக்கு எதிரே கொண்டுவந்து இருத்தும்படி கூறினார். நான் அப்படியே செய்தேன். அவர் அக் குழந்தையைத் தனது போர்வையால் மூடினார். அவர் வைத்திருந்த பிரம்பினால் குழந்தையைத் தட்டினார். உடனே குழந்தை வீர ஆசனம் என்னும் யோக இருக்கையில் இருந்து கொண்டு தமிழ்ப்பாடல்கள் மூலம் இராசயோகத்தைப் பற்றிப் பேசிற்று. இது நடக்கும் போது நான் யோகியைக் கவனித்தேன். அவர் உடல் அசைவற் றிருந்தது. மயக்கத்தில் இருக்கிறார் என நினைந்து அவரை எழுப்ப முயன்றேன். முதலில் அவர் உடல் கட்டை போல இருந்தது. பின்பு விழித் தெழுந்தார். உடனே குழந்தை அழத் தொடங்கிற்று. அவர் குழந்தைக்குப் பால் கொடுக்கும்படி சொன்னார்.”
ஆவிகளுடன் பேசுகின்றவர் “மீடியம்”(medium) எனப்படுவர். இராக்காலத்தில்தான் ஆவியுடன் பேசுவார்கள். ஒரு அறையில் மேசை இடப்பட்டிருக்கும். மேசையின் பக்கத்தில் திரைச் சீலை தொங்கவிடப்பட் டிருக்கும். ஆவியோடு பேசுபவரின் பக்கத்தே சிலர் இருப்பார்கள். அறையின் சன்னல்கள் எல்லாம் நன்றாக அடைக்கப்படும். அப்பொழுது ஆவியுடன் பேசுகின்றவர் மயக்க நிலையை அடைவார். அவர் மூலம் ஆவி பேசும். பக்கத்தே இருப்போர் கேள்விகளைக் கேட்பார்கள். அவை களுக்கு ஆவி “மீடியம்” மூலம் விடை அளிக்கும். இவ்வாறு, ஆவி களுடன் பேசிய பேச்சுக்கள் புத்தக வடிவில் வெளிவந்துள்ளன. ஆவிகள் தாம் குறிக்கப்பட்டவர்களின் ஆவிகள்தான் என்று உறுதிப்படுத்தும் பொருட்டுத் தமது வாழ்நாளில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளைக் கூறும். கீழ் வருவது ஒரு ஆவி பேசியதைப் பற்றிய நிகழ்ச்சியாகும்.
“2நான் ஒரு முறை ஆவியுடன் பேசும் ஒருவருடன் அறையில் இருந்தேன். அப்பொழுது எனது நண்பர்களும் இருந்தார்கள். கதவுகளும் சன்னல்களும் அடைக்கப்பட்டன. நான் தரையையும் பலகை அமைக்கப் பட்ட உட்கூரையையும் நன்றாகப் பரிசோதித்தேன். பின்பு விளக்கு அணைக்கப்பட்டது. ஆவியோடு பேசுபவர் நாற்காலியோடு நன்றாகக் கட்டப்பட்டார். நான் அவருக்குப் பக்கத்தில் இருந்தேன். ஒருவர் மெல்லிய குரலில் சமயத் தொடர்பில்லாத ஒரு பாட்டுப் பாடினார். சிறிது நேரத்தில் ஆவியோடு பேசுகின்றவர் மயக்கநிலை அடைந்தார். அதற்கு அடையாள மாக அவர் பேசத் தொடங்கினார். முதலில் அவர் பேச்சுத் தடைப்பட்டு வந்தது. பின்பு அவர் ஆவியின் குரலில் மிகவும் உணர்ச்சி ததும்பப் பேசினார். அவ்வகையான உணர்ச்சியுடைய பேச்சை நான் இதற்கு முன் ஒருபோதும் கேட்கவில்லை. ஆவியுடன் பேசியவர் சாதாரண நாட்களில் மிக அமைதியாக விருப்பார். அவர் இவ்வகையாக ஒருபோதும் பேசின தில்லை. அவ்வாறு பேசவும் அவருக்குத் தெரியாது. பேச்சு நல்ல தொனி யுடையதாயும், வாக்கியங்கள் அழகாகவும் அமைந்திருந்தன. அவருடைய பேச்சைக் கேட்ட சில பெண்களின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. நான் உபதேசியாரின் ஆவி, மனிதன் மூலம் பேசுகின்றதோ? என்று சொல்லி, அப்படியானால் சில அடையாளங்கள் செய்யும்படி கேட்டேன். உடனே ஆம் என்னும் விடை வந்தது. பின்பு சிறிது நேரம் அமைதி நிலவிற்று. சிறிது நேரத்தில் எனது முகத்தில் குளிர் காற்று வீசிற்று. கதவுகளும் சன்னல் களும் அடைக்கப்பட்டிருந்தமையால் அவ்வகைக் காற்று வருவதற்குக் காரணம் அறியமுடியாமல் இருந்தது. உடனே ஒரு கை எனது கையைத் தடவ ஆரம்பித்தது. நான் உடனே மடித்திருந்த கைவிரல்களில் இரண்டை நீட்டி ஆவியின் கையைத் தடவிப்பார்த்தேன். அது காற்றுப்போல இருக்கும் என நான் நினைத்திருந்தேன். ஆவிகளுக்கு நாம் தடவிப் பார்த்து உணரக்கூடிய உடல் இல்லை என்று நான் பிறர் சொல்லக் கேட் டிருக்கின்றேன். அக் கையை நான் நன்றாகப் பிடிக்கக் கூடியதாயிருந் ததைக் கண்டு மிக வியப்படைந்தேன். அது பொதுவான கையைவிடப் பெரியதுபோல எனக்கு இருட்டில் தோன்றிற்று. ஆவியின் கை எனது கையைத் தடவும்போது நான் எல்லாப் பக்கங்களிலும் காலை நீட்டி உதைத்துப் பார்த்தேன். ஆவியோடு பேசும் “மீடியத்தின்” கையாயின், கைக்குப் பக்கத்தில் அவர் உடல் இருக்கும் என நான் நினைத்தேன்.
இப்பொழுது எனது கையைத் தடவிய கை நொய்வுடையதாகத் தோன்றிற்று. தெரிந்து கொண்டாயா என்று ஆவி கேட்டது. நான் உடனே மயக்கமாக இருக்கின்றதென விடைகூறினேன். ஆராய்ந்து பார்; உண்மை வெளிப்படும் என ஆவி கூறிற்று.”
இன்னொரு வியக்கத்தக்க நிகழ்ச்சியை இங்குத் தருகின்றோம். அது வருமாறு:
“1சிறிய மேசை ஒன்றின் மீது ஒரு வாத்தியப் பெட்டி வைக்கப்பட் டிருந்தது. அறையில் கம்பளம் விரித்திருக்கவில்லை. வேறு ஒருவகையான அலங்காரங்களும் அங்கு இருக்கவில்லை; ஆறு நாற்காலிகள் மாத்திரம் அறையில் இருந்தன. அவை ஒன்றில் ஆவியுடன் பேசுகின்றவர் இருந்தார். இன்னொன்றில் நானும், மற்றவைகளில் எனது நண்பர்களும் இருந்தார்கள். இரண்டு மெழுகு திரிகள் கொளுத்தி வைக்கப்பட்டிருந்தன. பின்பு அறை யின் மத்தியிலுளள ஒரு வட்டத்துள் எக்காளம்(Trumpet) ஒன்று வைக்கப் பட்டது. மெழுகு திரிகள் அணைக்கப்பட்டன. சிறிது நேரத்தில் வாத்தியப் பெட்டியினின்று ஓசை எழுந்தது. பின்பு எக்காளம் அசையத் தொடங்கிற்று. அது அந்தரந்தில் எழுந்து மிதந்தது. எக்காளத்தின் மினுக்கான பகுதி வந்து மூன்று முறை எனது முழங்காலில் முட்டிற்று. அது மிதந்து வந்து எல்லா ரிடமும் சென்றது. மனிதரின் சூழ்ச்சி எதனாலும் இவ்வாறு செய்யமுடியாது. அதனைக் கண்டு எனக்கு மிக வியப்பு உண்டாயிற்று. பின்பு அவ் வெக்காளத்தின் உள்ளேயிருந்து நண்பர்களே மாலை வணக்கம் என்னும் ஒரு ஓசை எழுந்தது. “முன் இவ்வுலகத்தில் வாழ்ந்த எவரின் ஆவி நீ” என்று நான் கேட்டேன். அது தனது முழுப் பெயரையும் கொடுக்க விரும்பவில்லை. பின்பு அது மெல்லிய குரலில் வில் குரூக்ஸ்(Will Crooks) என்று கூறிற்று. அவரது மரணத்துக்கு முன் அரசாங்க சபையில் சந்தித்த போது, அவர் பேசிய குரல்போல அத் தொனி இருந்தது.
“நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன். நான் அரசியல் தொடர்பான உதவிகளைச் செய்ய விரும்புகிறேன். போனர்லோ(Bonar Low) என்பவர் இங்குத்தான் இருக்கின்றார். நான் எனது பழைய கருத்துகளை மாற்றிக் கொண்டேன். நான் கருமங்களை நன்றாக அறிகின்றேன். குடியேற்ற நாடு களுக்கு முழுப் பாதுகாப்பையும் அளிக்கவேண்டும்” என்னும் வார்த்தைகள் வந்தன.
குரூக்ஸ் பிற்போக்காளரில் ஒருவர். அவர் இவ்வாறு பேசியது எனக்கு வியப்பை அளித்தது. போனர்லாவோடு பழகியதால் இக்கருத்து உண்டாயிற்றோ என்று என்னாற் கேளாமல் இருக்க முடியவில்லை. குரூக்ஸ் பேசும்போது தனக்கு எதிரில் கிளாஸ்டனின் வடிவம் தோன்றிற்று என்று “மீடியம்” கூறினார்.
ஆவிகள் உண்டு என்பதற்குரிய சான்றுகள்
“ஆவிகளின் ஒளிகள் காணப்பட்டன. மனித ஓசை போன்ற சத்தங்கள் கேட்டன; மனிதனுடைய முயற்சியில்லாமல் எழுத்துகள் தோன்றின; தமது உறவினருக்குப் பக்கத்தே நிற்கும் ஆவிகளின் நிழற்படங்கள் பிடிக்கப் பட்டன; ஆவிகளுடன் பேசும் அறைகளில் ஆவிகள் கண்ணுக்குத் தெரியக் கூடிய வடிவில் தோன்றின; ஆவிகளோடு பேசும் சிலர் அந்தரத்தே தூக்கப் பட்டார்கள்; சுவர் போன்ற வயிரமான பொருள்களுக்கூடாக பிற வயிரமான பொருள்கள் கொண்டுவரப்பட்டன; கயிற்று முடிச்சுகள் கண்ணுக்குப் புலப் படாத கைகளால் அவிழ்க்கப்பட்டன; சேர்த்துக் கட்டப்பட்ட கற்பலகை களின் இடையே செய்திகள் எழுதப்பட்டன; மேசைகள் அந்தரத்தே உயர்த் தப்பட்டன. பிளஞ்சட் என்னும் கருவிமூலம் அறியமுடியாத செய்திகள் எழுதப்பட்டன. ஒருவரது இரகசியமான செய்திகள் வெளியிடப்பட்டன. இவ்வகையான நிகழ்ச்சிகள் ஆவிகள் உண்டு என்னும் உண்மையை நிலைநிறுத்துகின்றன.1
மரணம் அஞ்சத்தக்கதன்று
மரணம் மக்கள் எல்லோராலும் பெரிதும் அஞ்சத்தக்க தொன்றா யிருக்கின்றது. அதற்குக் காரணம், மரணமென்றால் என்ன? அதற்குப்பின் நிகழ்வது என்ன? என்பவைகளைப்பற்றி அறிந்து கொள்ளாமையேயாகும். மரணம் என்பது ஒரு நிலையின் முடிவு; ஆனால் உயிர் செல்லும் பயணத்தின் முடிவன்று; இன்னும் செல்லவேண்டிய பாதையின் தொலைவு எமது நினைவினால் அறியமுடியாதது. மரணமென்பது, தான் வாழும் உடலாகிய சடப்பொருளைத் தொழிற்படுத்தும் வல்லமையை இழந்து உயிர் வெளியேறுதலாகும். நாங்கள் பிறக்கும்பொழுது எங்கள் முன் நிலை மையை மாற்றிக் காற்றுள்ள இவ்வுலகுக்கு வருகின்றோம். மரணத்தின் போது இந்நிலையை மாற்றி இன்னொரு பிறப்பே யாகும். ஆகவே அதற்கு நாம் அஞ்சவேண்டியதில்லை. இறந்தவர்களின் ஆவிகள் கூறியுள்ள செய்திகளால் மரணம் வருத்தம் விளைப்பதன்று என்றும், மரணத்துக்குப் பிற்பட்ட வாழ்வு, மிக மகிழ்ச்சிக்கிடனாயுள்ள தென்றும் தெரிகின்றன. அவைகளைப் பின் கூறப்படுபவைகளைக் கொண்டு அறிக.
உயிர் உடலை விட்டு நுண்ணிய உடலோடு வெளியேறும்போது வாழ்நாளில் நிகழ்ந்தவற்றின் காட்சிகள் எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக நினைவில் வருகின்றன. மனிதன் இறந்தவன் போலத் தோன்றலாம். நாடித் துடிப்பு இருதயத் துடிப்பு நின்றதற்கும், உடம்பில் வெப்பம் அகன்று போவ தற்கு மிடையிலுள்ள சில விநாடிகளில் மூளை நினைக்கின்றது. அப்பொழுது உயிர் தனது வாழ்க்கையில் நிகழ்ந்தவைகளை எல்லாம் தெளிவாக அறிகின்றது. மரணப் படுக்கைக்குப் பக்கத்தே உதவிக்கு இருப்பவர்கள் மெதுவாகப் பேசவேண்டும். மரணமானவுடன் அமைதியாக இருத்தல் வேண்டும். உரத்துப் பேசினால் அதன் நினைவுகளைக் குழப்புதல் கூடும்.1
மரண காலத்தில் நிகழ்வது
1மரண காலத்தில் நிகழ்வது என்ன என்பதைத் தெளிவுக்காட்சியாளர் (Clairvoyants) கூறியுள்ளார்கள். தெளிவுக்காட்சி என்றால் என்ன என்பதைப் பிறிதோர் இடத்தில் விளக்குவோம். தெளிவுக்காட்சியாளர் கூறியவை களைப் போலவே ஆவிகளும் தமது பேச்சுகள் மூலம் அறிவித்துள்ளன. மரண காலத்தில் மனிதனின் நுண்ணிய உடல் ஆவிவடிவில் உடலை விட்டுச் சிறிது சிறிதாகக் கழன்று வெளியே வருகின்றது. மரணப் படுக்கைக் குப் பக்கத்தில் அது முன்னைய உணர்ச்சி, முன்னைய நினைவுகளோடும் முன்னைய வடிவோடும் நிற்கின்றது. பக்கத்தே உள்ளவர்களை அது அறி கின்றது. ஆனால் அதற்குத் தான் அங்கு நிற்பதைப்பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்க முடியாமல் இருக்கின்றது. அது கண்ணில்லாமல் பார்க்க முடியுமோ எனச் சிலர் கேட்கலாம். புளோரிடா டாக்டர் எப்படித் தனது உடலைப் பார்த்தார்? ஆவி மயமான உடலில் பார்க்கும் சக்தி இருக்கின்றது. அதன் உதவியைக் கொண்டு அது பார்க்கின்றது. இதற்கு அதிகமாக எம்மால் ஒன்றும் கூறமுடியாது. தெளிவுக் காட்சியாளருக்கு அது நிழல் போலத் தோன்றுகின்றது. பொதுவான ஒருவருக்கு அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதுபோல, அது இன்னொரு ஆவிக்குப் புலப்படலாம். காலம் போகப் போக அது தூய்மை அடைகிறதென்றும், மரணமான உடனும் அதன்பின் சில காலத்தும் அது சடப் பொருள்களுக்கு அண்மையிலுள்ளதென்றும் தெரிகிறது. ஆனமையி னாலேயே இறந்தவர்களுடைய ஆவிகளின் தோற்றங்கள் இறந்த உடனும் அதன்பின் சில காலத்தும் தெளிவாகத் தோன்றுகின்றன. பரு உடலை விட்டுப் பிரிந்த அண்மையில் அவ் வாவியுடலில் பாரமான சடப்பொருள் அணுக்கள் செறிந்திருக்கலாம்.
2மரணத் தறுவாயை அல்லது இரண்டு உலகங்களுக்கும் இடையி லுள்ள நிலையை அடைந்தவர்கள் மறு உலகைக் காண்கிறார்கள். ரோஸ் மெரி என்னும் “மீடியம்” பழைய எகிப்திய மொழியில் ஆவிகள் கூறிய செய்திகளைச் சொன்னாள். அவள் கூறியவை பழைய எகிப்திய மொழியை ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருவியப்பளித்தது. மீடியம் மயக்க நிலையி லிருந்து மீண்டபோது ஆவி உலகத்திலிருந்து இவ்வுலகத்துக்கு வருவது எவ்வளவு பயங்கரமானது என்று கூறினாள். இவள் ஒருத்தி மாத்திரம் பழைய எகிப்திய மொழியைப் பேசுவதைக் கேட்டவள் அல்லது அதன் உச்சரிப்புகளை அறிந்தவளாவள். 1934ஆம் ஆண்டு சூன் மாதம் 27ஆம் தேதி லேடி நோனா என்பவள் (மீடியம் மூலம்) எனக்கும் வேறு பன்னிரண்டு பேருக்கும் எதிரில் பழைய எகிப்திய மொழியில் ஓட்டமாகப் பேசினாள்.
எகிப்திய இளவரசியாகிய லேடி நோனா என்பவள் பழம் பொருளா ராய்ச்சியாளர் மொழியாராய்ச்சியாளர்களின் வியப்புக்கும் விருப்பத்துக்கும் ஏதுவாக ரோஸ்மேரி என்னும் மீடியம் வாயிலாக 1936ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் நாள் பழைய எகிப்திய மொழியில் சில செய்திகளைப் பேசினாள்.
இப் பேச்சு கிராமபோன் தட்டில் பதிக்கப்பட்டது. 3400 ஆண்டுகளின் முன் இறந்த ஒரு பெண் இக்கால இசைத்தட்டில் பதிக்கும் பொருட்டுப் பழைய எகிப்திய மொழியிற் பேசினாளென்பது மிக வியக்கத்தக்கதே. இதனாற் பெறப்படும் உண்மை இத்துணை காலத்தின் முன் இறந்தவர் இன்றும் உயிரோடிருக்கின்றா ரென்பதேயாகும்.
இறந்துபோவதைப் பற்றிய பல செய்திகள் அவ்வுலகத்தினின்றும் சேகரிப்பட்டுள்ளன. அவ்விடத்தினின்று கிடைக்கும் செய்திகள் பெரும் பாலும் அடிப்படையில் ஒத்திருக்கின்றன. இறந்துபோவதைப்பற்றிப் பல வகையான மனோகற்பனைகள் இருந்துவருகின்றன. மரணம் இலகுவானது. அது ஒவ்வொரு இரவும் நித்திரை கொள்வதை ஒத்தது. நீ விழிக்கும்போது என்றும் வாயில் திறந்திருக்கும் ஒரு உலகைக் காண்கிறாய். அக் கதவுதான் மரணம். கவலைத் தழும்புகள் ஏறப் பெற்றிருப்பது கடவுள் நிந்தையாகும். மரணம் இக் கவலைத் தழும்புகளைப் போக்குவதாகும். அழுகையும் இழவுக் கொண்டாட்டங்களும் அநாகரிக மக்களுக்குக்குரியன. மரணம் மகிழ்ச்சிக்குரியதொன்று. கிரேக்கர் மரணக் கொண்டாட்டத்தில் விளை யாட்டுகள் வைத்தார்கள். ஐரிஸ் மக்களின் ‘வேக்’ என்பது மகிழ்ச்சிக்குரிய இவ்வகைக் கொண்டாட்டத்தின் நிழலே. துக்கங் கொண்டாடுதலும் அழுது புலம்புதலும் மரணமானவருக்கு இடையூறு விளைப்பன. இறந்துபோன அரசருக்கும் அதிகாரிகளுக்குமாக நாட்டுமக்கள் கொண்டாடும் துக்கக் கொண்டாட்டங்கள் இறந்த உயிர்களுக்கு விடுதலையளிக்க முயலும் ஆவிகளுக்கு மிக்க தொந்தரவளிக்கின்றன என்று அவை கூறியுள்ளன.
மோர்மன்(Mormons) என்னும் மக்களிடையே நான் வாழ்ந்தபோது அவர்கள் மரணக்கொண்டாட்ட காலத்தில் வெள்ளைப் பூக்களை அணி வதையும் பிணப்பெட்டியை வெள்ளைப் பூக்களால் அலங்கரிப்பதையும் கண்டேன். நல்லவர்களின் மரணத்தைத் துக்கமயமான பாடல்களால் கொண் டாடுதல் கூடாது; நல்ல பாடல்களைப் பாடிக் கொண்டாடுதல் வேண்டும். மரணத்தின் பின் அவர்கள் அமரரோடு உறைகிறார் எனப் புலுற்றா என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் கூறியிருக்கின்றனர். பிறப்பின் போது நாம் மகிழ்கின்றோம்; மரணகாலத்தில் அழுகின்றோம். இவ்விரண் டின் உண்மை களை நாம் அறிந்திருந்தால் துன்பகரமான இவ்வுலகத்துக்கு வந்ததைப் பற்றி நாம் துக்கப்படுவோம்; இன்ப மயமான ஆவி உலகத்திற் செல்வதைப் பற்றி நாம் மகிழ்ச்சி கூறுவோம்.
மரணத்தைப்பற்றி அறியப்பட்ட உண்மைகள் வருமாறு:
மரணமென்பது நாம் இயங்கும் வேகத்தில் உண்டாகும் மாறுதல். இது மனித உயிர் உடலை மாற்றுவதால் உண்டாகின்றது. அது மெதுவான இயக்க முள்ளதும் வேகமாக இயங்கக்கூடிய காற்றுப் போன்ற உடலைத் தொழிற் படுத்துகின்றது. எவ்வுலகிலாயினும் இறக்கின்ற உயிருக்கும் இதுவே நிகழ் கின்றது. இவ்வுயிர் ஆயத்தமில்லாது உடலைவிட்டு உயர்ந்த இயக்கமுள்ள இன்னொரு உலகிற் பாய்ந்தால் ஒருவன் பனிக்கட்டிபோல் குளிர்ந்த நீருள் குதிப்பதுபோன்ற அதிர்ச்சி உண்டாகும். இவ்வாறு ஆயத்தஞ் செய்வதற்குச் சிறிது காலம் வேண்டும். இடைப்பட்ட இந் நிலையை மரண நித்திரை எனக் கூறலாம். மரண நித்திரை என்பது மரணத்துக்குப்பின் உண்டாகும் தூக்க நிலை. ஆவி உடலோடு ஒரு உலகிலிருந்து இன்னொரு உலகுக்குச் செல்லும் போதும் மரணம் உண்டாகிறது. வாழும் பொருட்டு ஒருவன் நெடுகிலும் இறக்கின்றான்.
நாங்கள் உடல் உயிர் ஆவி என்னும் முப்பொருளாலானவர்கள். உயிர் உடலை விடும்போது உள்ளே இருக்கின்ற காற்றுமயமான உடலுடன் வெளியேறுகின்றது. காற்றுமயமான உடலை இன்னொரு உறை மூடியிருக் கின்றது. இது, உயிர் 1மூன்றாவது உலகில் சென்று பிறப்பதற்கு உதவியாக விருக்கின்றது. மரணத்துக்குப்பின் நித்திரை கொள்ளும் உலகிலிருந்து பிறப்பு உண்டானதும் வெளியே உள்ள உறை கழன்று விடுகிறது. இது நாம் அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றிவிடுதல் போன்றது. இவ்வாறு கழன்ற உறை காற்றுமயமான உடலின் வடிவினதாயிருக்கும். இவ்வுறையின் தொழிற்பாடு பூமியிலுள்ள பெண் அல்லது ஆணுக்கு மிக இன்றியமை யாதது. இது உள்மனத்துக்கும், மூளைக்கும் இடையில் மின்சக்தியைத் தொழிற்படுத்தும் யந்திரம் போல் வேலைசெய்கினறது. இவ்வாறு இது மனிதருக்கு இடைவிடாது உணர்ச்சி ஊட்டுகின்றது. நித்திரைக் காலத்தில் உயிர் கூட்டுள் உறைவதுபோல் உறைக்குள் தங்கிவிடுகின்றது. அப்பொழுது உயிர் வெளியுடலோடுள்ள தொடர்பை இழந்துவிடுகின்றது. காந்தசத்தியைப் பரப்பும் “டைனமோ” செய்வதுபோல உடல், உயிரின் ஒளியைப் பெற்று இருக்கின்றது.
மரண காலத்தில் என்ன நிகழ்கின்றதென்று தெளிவுக்காட்சியாளர் கவனித்திருக்கிறார்கள். மரணகாலத்தில் நொய்யஉடலை மூடியிருக்கும் உறை தலைவழியாகக் கழல்கின்றது. அப்பொழுது நாபி மூளை என்னும் இரண்டு கயிறுகளால் பிணிக்கப்பட்ட நிலையில் அது உடலுக்கு அண்மை யில் நிற்கின்றது. பின்பு கயிறுகள் அறுந்துபோக உயிர் உறைக்குள் இருக்கும் நுண்ணுடலோடு மறு உலகுக்குப் பயணமாகின்றது.
புது உலகுக்குச் செல்வதாகிய புதிய பிறப்பு வருத்தம் விளைப்பதா யுள்ளதோ என்று கேட்கிறார்கள். அது வருத்தம் விளைப்பதன்று. மரணத் துக்குப்பின் செல்லும் நித்திரை உலகில் அரைவிழிப்பு நிலை உண்டா கின்றது. அங்கு நின்றும் மறு உலகுக்குச் செல்லும் பிறப்பு உண்டாகின்றது. மரணத்துக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் இவ்வுடலை விட்டுக் காற்றுமயமான உடல் பிரிந்து சென்றுவிடும். சில நாட்களுக்கு அவ்வாறு நிகழாமல் இருப்பதும் உண்டு. இரண்டு வகையிலும் இறப்பு நோவற்றது.
மனிதன் இறக்கும்போது காந்த சத்திபோன்ற உடலின் இயக்கம் தானாக நோவின்றி நிகழும். இவ்வியக்கங்கள் காற்றுமயமான உடலை இவ்வுலக உடலினின்றும் பிரிப்பதால் உண்டாகின்றது.
இறக்கும் மனிதனை அவ்வுலக நண்பர் சந்திக்கிறார்கள். அவர் களுட் சிலர் உண்மையில் பிள்ளை பெறுவிக்கும் வைத்தியராவர். அவர்கள் இவ்வுலக உடல் காற்றுமயமான உடலைப் பிணிக்கின்ற பற்றுகளை ஒவ்வொன்றாக விடுவித்து விடுகிறார்கள். புதிய பிறப்பு நிலை பலருக்குப் பிள்ளைப்பேற்று விடுதியில் எவ்வாறு நிகழ்கின்றதோ அவ்வாறு பலவாறாக விருக்கும். மூன்றாவது உலகில் பிறப்பது இவ்வுலகில் பிறப்பதை ஒத்தது.
இவ்வுலகில் இறந்தவுடன் நாம் காற்றுமயமான உடலுடன் அடுத்த உலகுக்குச் செல்கின்றோம். காற்றுமயமான உடலை ஒரு உறை மூடியிருக் கின்றதெனக் கூறினோம், இவ்வுறை பிள்ளையைச் சூழ்ந்து கிடந்து பிள்ளை பிறந்தபின் விழுந்து போகின்ற நஞ்சுக்கொடியை ஒத்தது. நஞ்சுக்கொடி போன்றுள்ள உறை மூன்றாவது உலகில் பிறப்பதற்குத் துணையாயிருப்பது மாத்திரமல்லாமல் காற்றுமயமான உடல் உயர்ந்த இயக்கத்தில் பழக்கமடை யுங் காலம் வரையில் பாதுகாக்கும் உறையாகவும் இருக்கின்றது. நீ வெளிப் படுத்தும் இயக்கங்களை, உறை உள்ளே அடக்கி வைத்திருக்கின்றது. ஆவி உலகில் சஞ்சரிக்கப் பழகுமுன் பூமி சம்பந்தமான அலைகள் கழுவப்படுதல் வேண்டும்.
காற்றுமயமான உடலினின்றும் கழன்றுபோன உறை சில சமயங்க ளில் காற்றுமயமான உடலின் வடிவோடு இவ்வுலகுக்கு வந்து மிதந்து திரி கின்றது. அது ஆவிமயமான உடலில் நின்றும் பெற்ற சிறிது உயிர்ப்புச் சக்தி யோடு சிறிது நேரம் மனிதனைப் போலக் காட்சியளித்து விரைவில் மறைந்து போகின்றது. சில சமயங்களில் நாம் கல்லறைகளிற் காணும் ஆவிகள் இவ்வகையினவே; சில, இறந்தவர்களின் ஆவிகளாகவும் இருக்கலாம்.
நீ இறக்கும்போது உனது இவ்வுலகப் பற்றுகள் படிப்படியாகத் தீர்ந்துபோகின்றன. உனது படுக்கைக்குப் பக்கத்திலுள்ள நண்பர்களைப் பார்க்கவும் அவர்கள் செய்யும் ஓசைகளைக் கேட்கவும் உன்னால் முடியும். ஆனால் சிறிது சிறிதாக அவை கனவு போல மறைந்துபோகின்றன. பின்பு நீ கனவு போன்ற மயக்கமான ஒரு நிலையை அடைகின்றாய்.
இறக்கும்போது மனிதர், தாம் செய்த பாவங்களைப் பற்றிய நினை வால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையாகலாம். மரணப்படுக்கை நன்மை தீமைகளை ஆராய்கின்ற இடமன்று. வாழ்க்கை யில் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னோக்கிக் காணும் இயல்பு மரணத்துக்கு முன் உண்டு. தெரியாத கடலிலுள்ள துறைமுகத்தைப் பிடிப்பதற்குப் பாயெடுத்துச் செல்கின்ற கப்பலைப் போல மனத்தில் ஓர் உணர்ச்சியும் தோன்றுகின்றது.
இருதயத் துடிப்பு இருக்கும்போதும் இறக்கும் மனிதர் இவ்வுலகை விடடுச் செல்கின்றார்கள் என்பது உண்மை. இருதயம் அடிக்கும்போதும் அவர்களின் ஒரு கால் அவ்வுலகிலும் மறு கால் இவ்வுலகிலும் இருக்கின் றன. இன்னொரு உலகில் பிறப்பதாகிய மரணம் தொடங்கி விட்டது. பிள்ளையையும் தாயையும் இணைக்கின்ற கொப்பூழ்க் கொடியைப் போன்ற தொன்று காற்றுமயமான உடலையும் பரு உடலையும் பிணிக்கிறது. அது அறுவதற்கு முன் மரணம் நிகழமாட்டாது. இருதயம் நின்று மனிதன் இறந்து போனதாகக் கருதப்பட்டபின் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரையிலும் மனிதன் உயிரோடிருத்தல் கூடும். காற்றுமயமான உடலோடு அதன் உறையைப் பிணைக்கும் வலைபோன்ற நூல்களும் உண்டு. இக் கட்டுகளை ஆவி உலக மருத்துவர் அறுக்குமுன் ஆவிமயமான உயிர் ஆவியுலகில் வாழமுடியாது. இது மூன்றாம் உலகச் செய்தியைக் குறிக்கும். இம் மூன்றாவது உலகுக்கே பெரும்பாலோர் செல்கின்றனர்.
குறுகிய காலம் அல்லது நீண்டகாலம் மயக்க நிலையிலிருந்த பின்பு விழிக்கும்போது அறையில் வெள்ளை உடுப்பு அணிந்த மருத்துவரும் தாதிமாரும் நிற்பதை நீ காண்பாய். இது நீ அபாயத்துக்குள்ளான பின்பு மருத்துவசாலை அறையில் விழிப்பது போலாகும். நீ இறந்துவிட்டாய் என்று ஒருவர் உனக்குச் சொல்லும்வரையில் நீ நினைப்பாய். இறந்து விட்டாயென்று உன்னை நம்பச் செய்தல்தான் மிக வில்லங்கமான காரியம். உனது படுக்கைக்கு முன்னால் உயிருள்ளவர்களைக் காணும்போது நீ எப்படி இறந்திருக்கிறாயென்று நம்பமுடியும். நீ சன்னல் வழியாகத் திறந்த உலகைப் பார்க்கவும், தொலைவிலிருந்து வரும் இசையையும், பறவைகள் பாடும் ஓசையையும் கேட்கவும் முடியும். உனக்கு அதிக பசியிருக்கும் போது இறந்துவிட்டாயென்று நீ எப்படி நம்ப முடியும். நீ உணவு வேண்டு மென்று கேட்கிறாய். உடனே உணவு கிடைக்கிறது. உனக்குத் தாகம் உண்டாகிறது. உனக்கு விருப்பமான தேநீரையோ தண்ணீரையோ நீ குடிக்கலாம். பின்பு உனக்கு நித்திரை உண்டாகின்றது. பின்பு தாதி ஒருத்தி உனது படுக்கைக் கெதிரேயுள்ள திரைச் சீலையை இழுத்துவிடுகின்றாள். நீ நித்திரை கொள்கிறாய். விழிக்கும்போது இப்பூமியை ஒத்த ஒரு உலகில் இருப்பதை நீ காண்கிறாய். மறுபடியும் பூமியில் இருப்பதாக நீ எண்ணு கிறாய். நீ நீலவானத்தையும் மரங்களையும் கடல்களையும் பார்க்கிறாய். இரண்டு பதினொரு பேர் கிறிக்கட் பந்தாடுவதையும் நீ காணமுடியும்.
தாதி உன்னைப் பார்க்க வரும்போது நீ விழிப்பாயிருந்தால் அவளுடைய கை மனிதக்கை போலக் சூடாகவும் அழுத்தமாகவும் இருப் பதைப் பார்த்து நீ ஆச்சரியப்படமாட்டாய். உன்னுடைய ஆவிமயமான உடல் மேலான இயக்கத்தில் பழகும்போது நீ இறந்துவிட்டாயென்றும் ஆனால் உயிரோடிருக்கிறாயென்றும் நீ அறிவாய். பூமியிலிருந்ததிலும் பார்க்க நீ அதிகம் உயிர்ப்பாயிருக்கிறாய்.
இந்தப் புதிய உலகில் மயக்க நிலையிலிருந்து விழித்தெழுவதைப் பற்றிக் கூறியுள்ளேன். இம் மயக்கம் அல்லது நித்திரை என்பது என்ன?
இது பூமிக்கும் மூன்றாவது உலகத்துக்கும் இடையிலுள்ள நிலைமை. பூமியில் இறப்பவர்கள் எல்லாம் இந் நிலைமையைக் கடந்து செல்ல வேண்டும்.
ஆவி உடலோடு விரைவான இயக்கமுடைய ஆவி உலகத்துக்குச் செல்வதற்கு இந் நித்திரை உயிரை ஆயத்தஞ் செய்வதாகும். அந் நித்திரை யில் ஒரு சிறப்புண்டு. இது ஒரு நிமிடம் ஒரு மாதம் அல்லது ஒரு ஆண்டு நீடிக்கலாம்; சில சமயங்களில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளும் ஆகலாம். இங்கு உண்டாகும் நித்திரையின் அளவு உயிர் பூமியில் நடத்திய வாழ்க்கை யின் தன்மையையும் அதற்கு எவ்வளவு இளைப்பாறுதல் வேண்டுமென் பதையும் பொறுத்தது. அதனை மத்திய உலகம் என்பதற்கு மேல் அதிகம் கூறமுடியாது,
ஆவி உலகத்தில் உண்டாகும் மாறுதல்கள் அதிசயப்படத்தக்கவை. ஆவி உலகில் நேரம் என ஒன்று இல்லை. இறந்தவர் ஆவி உடலோடு வாழும் மூன்றாவது உலகில் இறப்பு, நிகழ்வு, வருங்காலங்கள் ஒன்றோடு ஒன்று பின்னியுள்ளன. நாம் இவ்வுடலோடு இருக்கும்போது இதைப்பற்றி அறிந்து கொள்ள முடியாது.
1ஆவியுலகம்
மூன்றாவது உலகம் ஆவிஉலகங்களில் முதலாவதாகும் பூமி அமைப்புக்குள்ள சடப்பொருளிலும் பார்க்க ஆவி உலக அமைப்பிலுள்ள சடப்பொருள்களும், அவ்வுலகங்களில் இயங்கும் வேகங்களும் வேறானவை. உறையினால் மூடப்பட்ட காற்றுமயமான உடல் சதைமயமான உடலை விட்டுப் பிரியு முன்பும் வெள்ளிய கயிறு அறுபடுமுன்னமும் இறக்கின்ற மனிதன் இவ் வியல்பை உணர்கின்றான். இவ்வுலகத்துக்கும் ஆவி உலகத் துக்கும் இடையில் கனவுபோன்ற நிலையில் இருக்கும்போது நீ உனது மரணப் படுக்கையின் பக்கத்தில் நின்று உனது உடலைப் பார்ப்பதை அறிந்து நீ ஆச்சரியப்படுவாய். இதன் பின் மூடப்பட்ட சன்னலுக்கு அல்லது கதவு களுக்கு ஊடாக அவைகளால் தடைபடுத்தப்படாமல் செல்வதை நீ காண்பாய்.
ஆவியுலகத்தை அடைந்ததும் அங்கு இரவோ பகலோ சூரியனோ இல்லாதிருப்பதை நீ காண்பாய். அங்கு பரந்த மெதுவான வெளிச்சம் எப்பொழுதுமுண்டு. அதனை அங்குள்ளவர்கள் ஆவிமயமான சூரியன் என்கிறார்கள். அங்கு நிழல் இல்லை என்று சொல்லமுடியாது. ஆவி உலகம் சூரியனைச் சுற்றி வருவதில்லை. ஆகவே அவர்கள் காலத்தைப்பற்றி அறியார். அவர்களுக்குத் தூரமும் இல்லை என அறிய வருகின்றது. ஆவி உலகிலுள்ளவர்கள் வருங்காலச் செய்திகளைச் சொல்லும்போது காலத்தைக் குறிப்பிட வில்லங்கமடைகின்றனர்.
காலஞ் செல்ல செல்ல ஆவி உலகிலுள்ளவர்க்கு நித்திரையோ, பசியோ தோன்றுவதில்லை. பசியும் நித்திரையும் பூமியிலுள்ள பழக்கங்கள். அவர்கள் உடல் சம்பந்தமானவைகளைக் கடந்து விடுகிறார்கள்.
உணவின்பொருட்டு நாங்கள் ஆவிமயமான உடலிலுள்ள துவாரங்கள் வழியாகப் போஷணையை இழுத்துக் கொள்ளுகின்றோம். பசி கொள்ளும் பழக்கம் விரைவில் மறைந்துபோகின்றது. அவ்வுலகில் பொருளாதாரம் சம்பந்தமான தொடர்புகள் இல்லை. அங்கு இலாபம் வாடகை வட்டி போன்றவைகள் இல்லை. மண்ணுலகத்திலுள்ளவர்கள் இவைகளுக்குத் தலைவணங்கித் தமது திறையை இறுத்து வருகிறார்கள். அங்குச் சென்றதும் அவ்விடத்தில் வாணிபம் இல்லாதிருத்தல் அவ்விடத்து நூதனங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. அங்கு நினைவினால் எல்லாவற்றையும் உண்டாக்கிக் கொள்ளலாம். ஒரு பொருளைப்பற்றி நினைத்ததும் அது கிடைக்கின்றது.
மரணத்துக்கு அப்பாலுள்ள உலகம் அங்கு வாழும் கோடிக்கணக் கானவரின் நினைவினால் உண்டானது. அதைப்பற்றி நாம் தெளிவாக ஒன்றும் கூறுதற்கில்லை. அவ்வுலகத்தினின்றும் ஆயிரக்கணக்கான ஆவிகள் அவ் வுலகத்தைப்பற்றிக் கூறியிருக்கின்றன.
பூமியிலுள்ளவர்கள் தமது ஆச்சரியத்தைக் குறிப்பிடும்போது, இவ்வுலகிலுள்ள வீடு, தோணி போன்றவை முதலில் நினைக்காமற் செய்யப் படுகின்றனவோ என்று அவர்கள் கேட்கிறார்கள்.
சில சமயங்களில் இப்பக்கத்திலுள்ள நாங்கள் எண்ணங்களினால் படைத்தல் செய்கின்றோம். நித்திரையில் காணும் கனாக்கள் சில சமயங் களில் உண்மையாக நிகழ்கின்றன.
உடல் சம்பந்தமான போராட்டங்கள் இல்லாத இவ்வுலக அரசியல் போராட்டங்கள் போன்றவை அவ்வுலகில் இல்லை. எல்லாருக்கும் விடுதலையுள்ளதும் எவருக்கும் சம உரிமை மறுக்கப்படாததுமாகிய ஒரு உலகில் பழம்போக்கு புதியபோக்கு என்னும் பேச்சுகள் பொருளற்றன வாகும். எங்களுலக அரசியல் கொள்கைகள் அதிகாரத்தையும் பொருளை யும் குறிக்கோளாகக் கொண்டவை. இவ்வகையான சொற்களே இல்லாத அவ்வுலகங்களில் இவ்வகைப் போராட்டங்கள் இல்லை. நாம் விரும்பிய வற்றை எண்ணங்களாற் படைத்துக்கொள்ள முடியுமானால் நாம் வாங்கவோ விற்கவோ வேண்டியவை எவையும் இல்லை.
அங்குப் போக்குவரத்து மிகப் புரட்சிகரமானது. நாம் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தை அடைகின்றோம். இப் பூமியில் இது முடியாத காரியம். நாம் விரும்புகிறபடி நாம் இருக்கிறோம். அப்படியாயின் அவ்விடத்தில் போராட்டங்கள் இல்லையா? அங்கு நன்மை தீமைகளுக் கிடையில் எதிர்ப்பில்லையா? அவ்விடத்திற் சென்றதும் நாம் நிறைவுடைய வர்களாக மாறிவிடுகின்றோமா? என்று நீவிர் கேட்கக்கூடும்.
இவ்வாறில்லை. எங்கள் குணம் சம்பந்தப்பட்ட மட்டில் நாம் இங்கிருப்பதுபோலவே இருக்கிறோம். அங்கு நன்மைக்கும் தீமைக்கும், சரிக்கும் பிழைக்குமிடையில் போராட்டங்கள் நிகழ்கின்றன. பாரமான உடலை விட்டுப்போன அவ் வுலகத்தில் இப் போராட்டங்கள் மிகக் கூர்மை யாகவும் உணர்ச்சியுடையனவாகவும் இருக்கின்றன.
இங்கு காம இச்சை உள்ளவன் அங்கும் அப்படியே இருக்கின்றான். இங்கு சோம்பலாயிருப்பவள் அங்கும் அப்படியே இருக்கிறாள். இங்கு அதிகாரத்துக்கு ஆசைப்படுகின்றவர்கள் அங்கும் அப்படியே இருக்கி றார்கள். அவ்விடத்தில் இதனைப் பெறும் வாய்ப்பு மிகக் குறைவாயிருக் கின்றது. ஆவி உலகில் உள்ள ஒரு துயரம். அங்குள்ளவர்கள் தமது கீழான இவ் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு அடிக்கடி இவ்வுலகுக்கு வரமுடியாமலிருப்பதாகும்.
ஏன் இதற்கு மாறாக இருக்க முடியாது? இவ் வுடலைவிட்டு ஆவி உடலுடன் இருப்பது அளவில் மாத்திரம் மாற்றமுள்ளது. ஆவியுலகை அடையும்போது மனநிலை பூமியிலிருந்தது போலவே இருக்கின்றது. இவ்வுலகில் தீமைகளையே செய்வோர் பெரும்பாலும் மூன்றாவது உலகத்திலேயே வாழ்கிறார்கள். இவர்கள் இங்கு பெண்போகம் ஆண் போகம் போன்ற நுகர்ச்சிகளில் மூழ்கலாம். காற்றுமயமான உடல் அவர்கள் இவ்வாறு இன்பங்களை நுகர்வதற்கு இடம் அளிக்கின்றது. இவ்வாறு இன்பங் களை நுகர்ந்தபின் அவர்களின் ஆசைகள் தணிந்துபோகின்றன. பின்பு அவர்கள் மேலான உலகங்களில் வாழ நினைக்கிறார்கள்.
மறு உலகில் கல்வி, தொலைவிலுணர்தல் (தெலிபதி) முறையானது. அவர்கள் புத்தகங்களைப் பயன்படுத்துவதில்லை. அவர்களால் எங்கள் புத்தகங்களை வாசிக்கவும் முடியும். வாய்பாடஞ் செய்தலும் பரீட்சைகளும் இல்லாத ஆவி உலகில் படிப்பு முறை மனத்தை ஒன்றில் நிறுத்தும் அடிப் படையுடையது. அங்கு உள்ளவர்கள் எல்லாரும் ஒரே சமயத்தவரா? இவ் வுலகில் எவ்வாறு நம்பிக்கையுள்ளவர்களா யிருந்தார்களோ அவ்வாறே அவ்வுலகிலும் இருக்கிறார்கள். ஆவி உலகிலுள்ளவர்களின் சமயமும் வாழ்க்கையும் இணைந்து செல்கின்றன. எங்கள் சமயமும் வாழ்கையும் வெவ்வேறானவை. 1ஆர்தர் கொனான்டேல், ஆவி உலகத்தைப் பற்றித் தமது நூல் ஒன்றில் கூறியிருப்பது வருமாறு: “இறந்தவர் பலரிடமிருந்து செய்திகள் பல நாடுகளிற் பலகாலங்களிற் கிடைத்துள்ளன. அவற்றில் இவ் வுலகத்தைப்பற்றிய உண்மையான செய்திகள் அடங்கியுள்ளன. அச்செய்தி களுள் நாம் ஆராய்ந்து பார்த்து அறியக்கூடியன, மெய்யாகக் காணப் பட்டால் நாம் ஆராய முடியாமலிருப்பனவும் மெய்யாயிருக்குமெனக் கொள்ளுதல் தவறாகாது. பல இடங்களில் பலவேறு காலங்களிற் கிடைத்த செய்திகள் ஒத்திருத்தலால் அவை உண்மை என்று கொள்ளுதல் வலி யுடையதெனத் தோன்றுகின்றது. நான் நேரில் இருந்து எழுதி வைத்திருக் கின்ற பதினைந்து அல்லது இருபது ஆவிகளுடைய பேச்சுகளின் குறிப்புகள் பிழையாக இருக்கும் என்று கூறமுடியாது. ஆவிகள் இவ்வுலக நிகழ்ச்சிகளைக் கூறுதல் போலவே மறு உலக நிகழ்ச்சிகளையும் கூறுதல் கூடும். அவை கூறும் இவ்வுலக நிகழ்ச்சிகள் மெய் என்றும் மறு உலக நிகழ்ச்சிகள் பொய் என்றும் கூறமுடியாது.
அண்மையில் ஒரே வாரத்தில் மறு உலகத்தைப்பற்றி இரண்டு செய்திகள் எனக்குக் கிடைத்தன. ஒன்று ஒரு தேவ ஆலயத்தின் உயர்ந்த பதவியிலுள்ள ஒருவருடைய உறவினரின் கைவாயிலாக ஆவி எழுதியது. இன்னொன்று ஸ்காத்துலாந்திலுள்ள ஒரு தொழிலாளனின் மனைவி மூலம் வெளிவந்தது. இவ்விருவருக்கும் ஒருவரைப்பற்றி ஒருவருக்குத் தெரியாது. ஆனால் இருவர் மூலம் வெளிவந்த செய்திகள் ஒரேவகையாக உள்ளன. இருவர் மூலமும் ஆவிகள் வெளியிட்ட செய்திகளால் நாம் அறியக் கிடப்பன வருமாறு. மரண காலத்தில் உயிர் நோவின்றியும், இலகுவாகவும் உடலைவிட்டு வெளியேறுகின்றது. அப்பொழுது சமாதானமும் சுகமும் தோன்றுகின்றன. மரணம் அடைந்தவர், ஆவியுடலில் நிற்கும்போது தனது பலவீனம், நோய், உறுப்புக் குறைவு தன்னைவிட்டு நீங்கிவிட்டனவாக உணருகின்றார். இவ்வுயிர் மரணப்படுக்கையிலுள்ள உடலுக்குப் பக்கத்தே மிதக்கின்றது; அல்லது நிற்கின்றது. அப்பொழுது அது தனது உடலையும் அதற்குப் பக்கத்திலுள்ளவர்களையும் பார்க்கின்றது. இப்பொழுது அவ் வாவி உடல் சடப்பொருள்களுக்கு அண்மையிலுள்ளது. ஆகையினா லேயே அப்பொழுது, இறந்தவர், அவர் நினைக்கும் ஒருவரின் முன் ஆவி வடிவில் தோன்றுகின்றார். இவ்வாறு பரீட்சித்துப் பார்த்த 250 ஆவித் தோற்றங்களில் 134 தோற்றங்கள் மரணம் நிகழ்ந்தவுடன் தோன்றியவை.
மரணப் படுக்கையின் பக்கத்தே நிற்கும் ஆவி, பக்கத்தேயுள்ள தனது நண்பர்களைப்பற்றி நினைக்கின்றது. அது தனது எண்ணங்களை வெளியிட முயல்கின்றது. ஆனால் அவ்வாறு செய்ய அதற்கு முடிவதில்லை. அதனை அவர்கள் உணர முடிவதில்லை. அங்கு உயிரோடு இருப்பவர்களைவிட இன்னும் வேறு சிலர் இருப்பதை அது உணர்கின்றது. அவர்களின் முகங்கள் அதற்குப் பழகியனவாகக் காணப்படுகின்றன. அவர், முன்னே இவ்வுலகில் இருந்து இறந்து போனவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் அதன் கையைப் பிடித்து முத்தமிடுகின்றனர். அவர்களுடனும் இன்னும் அங்கு இப் புதிய ஆவியை எதிர்பார்த்திருந்த சில ஆவிகளுடனும் பருப்பொருள் களாகிய தடைகளைக் கடந்து மிதந்து செல்கின்றது. இது உண்மையான வரலாறு. இதனையே பல ஆவிகள் திரும்பத் திரும்பக் கூறியுள்ளன. ஆவி பேய் அல்லது தேவதையன்று. அது இறந்தவரின் ஆற்றல், அறிவு, வடிவம் முதலியவைகளைக் கொண்ட தோற்றம். புதிய வாழ்க்கைக்குச் செல்வதன் முன் புதிய ஆவி சிலகாலம் நித்திரைக்குச் செல்கின்றது. இக்கால எல்லை பலவாறு மாறுதல் உடையது. சில ஆவிகளுக்கு நித்திரை உண்டாவதில்லை. சில ஆவிகளுக்கு வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு நித்திரை உண்டா கின்றது. ரேமாண்ட் என்பார் தனக்கு ஆறு நாட்களுக்கு நித்திரை இருந்த தெனக் கூறினார். மேயேர்ஸ்(Myers) என்பவர் தனக்கு நீடித்த நித்திரை இருந்ததெனக் கூறினார். வாழ்க்கையில் எவ்வளவு மனக் குழப்பம் இருந் ததோ, அவ்வளவுக்கே நித்திரையும் உண்டு எனத் தெரிகிறது. அக் குழப்பங் களை ஒழிப்பதற்காகவே, நித்திரை உண்டாகிறதெனத் தெரிகின்றது. சிறு குழந்தைக்கு அவ்வகை நித்திரை வேண்டியிராது.
மரணப் படுக்கையில் படுத்திருப்பவர்கள், இறந்தவர்கள் வந்திருப்ப தாக கூறுவதைக் கேட்டிருக்கின்றோம் நாங்கள் அவர்களைப் பார்ப்ப தில்லை. அவர்கள், வந்து நிற்பவரைச் சுட்டிக் காண்பிக்கின்றார்கள். நாங்கள், நோயின் கூற்றினால் அவர்கள் பிதற்றுகிறார்கள் எனக் கருதுகின்றோம், அவர்கள் கூறுவன உண்மை நிகழ்ச்சிகளே என்று இப்பொழுது எமக்குத் தெரிகிறது.
நித்திரையைவிட்டு எழுந்தவுடன் ஆவி மிகவும் பலவீனமாக இருக் கிறது. அது, பூமியில் பிறந்த குழந்தைக்கு உடல் எப்படி இருக்கின்றதோ அது போன்றது. உடனே மறுபடியும் பலம் உண்டாகின்றது. மறுபடியும் வாழ்க்கை ஆரம்பமாகின்றது. மறு உலக வாழ்க்கை மகிழ்ச்சிக் குரியதாக உள்ளதென்று எல்லா ஆவிகளும் கூறுகின்றன. ஒரே வகையான கருத் துடையவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்கிறார்கள். அவர்கள் மறுபடியும் இவ்வுலகுக்குத் திரும்பிவர விரும்புவதில்லை. இது வெறும் கதையன்று. இது உண்மை என்று காட்டுவதற்குப் பல சான்றுகள் உள்ளன.
இறந்து அதிக நாளாகாதவர்களின் ஆவிகளே பெரும்பாலும் வந்து பேசுகின்றன. நாட்செல்லச் செல்ல அவை தோன்றுவதில்லை. டௌசன் ரொசர்(Dawson Roger) என்பவர் மூலம் மான்தான்(Manton) என்பவரின் ஆவி பேசிற்று. அது, தான் லோஹன்ஸ் லிதியாட் என்னும் இடத்திற் பிறந்த தென்றும், தனது உடல் 1677இல் ஸ்ரோக்நியுக்டன் என்னும் இடத்தில் புதைக்கப்பட்டதென்றும் கூறிற்று. ஆராய்ச்சியில் அவ்வகையானவர் இருந்தார் என்றும், அவர் கிராம்வெல் காலத்தில் தேவாலயத்தில் ஊழியம் செய்தவர் என்றும் நன்றாக அறியவந்தது. இது வரையும் பேசிய ஆவிகளுள் இது பழங்காலத்தது. மறு உலகத்தில் குறித்த, சிலகால எல்லைக்குப்பின் அவை வெவ்வேறு மண்டலங்களுக்குச் செல் கின்றன. இம் மண்டலங்களுக்குள்ள தொடர்பு எங்களுக்கும் ஆவி உலகத் துக்குமுள்ள தொடர்பு போன்றது. கீழ் உள்ளது மேலே போகமுடியாது; மேல் உள்ளது விரும்பியபோது கீழே வரமுடியும். வாழ்க்கை இவ்வுலகின் சிறந்த பகுதிகளை ஒத்தது. இவ்வுலக வாழ்க்கை உடலோடு தொடர்புடையது. அவ் வுலக வாழ்க்கை மனத்தோடு சம்பந்தமுடையது. உணவு, பொருள், பண்டம், ஆசை, நோய் போன்றவை இவ்வுடம்போடு அகன்றுவிடுகின்றன. அறிவு சம்பந்தமானவை வளர்ச்சியடைகின்றன. இவ்வுலக வாழ்க்கையில் எப்படி உடை அணிந்திருந்தார்களோ, அவ்வாறே அவ்வுலகிலும் உடை அணிந் திருக்கிறார்கள். சிறியவர்கள் பெரியவர்களாக வளர்கிறார்கள். அங்கு அவர்கள் கூட்டங் கூட்டமாக வாழ்கிறார்கள். ஆவி உலகிலுள்ள ஆண், உண்மையான பெண் துணையைத் தேடிக்கொள்கிறது. ஆனால் ஆண் பெண் தொடர்பான சேர்க்கையும் பிள்ளைப் பேறுகளும் இல்லை. அங்கு மொழிகள் இல்லை. எண்ணங்களே மொழியாக வழங்குகின்றன. ஆவி களுக்கு எல்லாம் அறிவது போன்ற ஒருவகை உணர்ச்சியுண்டு. இவ்வுலகி லுள்ள சமயக் கொள்கைகளில் ஒன்று மற்றதிலும் பார்க்கச் சிறந்தது அன்று என்றும், எல்லாம் முன்னேற்றத்துக்குரியனவே என்றும் எல்லா ஆவிகளும் கூறியுள்ளன. கடவுளைத் துதிப்பதினால் நன்மை உண்டாகிறது என்றும் அவை அறிவித்துள்ளன. புதிதாக மற்ற உலகத்துக்குச் சென்ற ஆவிகள், தாம் மரணமடைந்து விட்டதாக உணர்வதில்லை.
கொனண்டேல் “புதிய வெளிச்சப்பாடுகள்”1 என்னும் நூலில் கூறி யிருப்பது வருமாறு. எனக்கு கிடைத்துள்ள செய்திகளைக்கொண்டு அறியக் கிடப்பன வருமாறு: இறந்தவர்களின் ஆவிகளுக்கு வடிவுண்டு. அவை நமது கண்களுக்குப் புலப்படுவதில்லை. அவ் வடிவங்கள் இவ்வுலகில் நடமாடிய உடலின் வடிவைப்போன்றன. ஆனால் அதிலும் பார்க்க அழகிய தோற்றமுடையன; அவற்றுக்கு முதுமை, நோய், வறுமை செல்வம் என்பன இல்லை. அவை உடை தரிக்கின்றன. அவை நித்திரை கொள்வ தில்லை; ஆனால் ஒருவகைப் பாதி விழிப்பும், பாதி உறக்கமுமாகிய நிலையை அடைகின்றன. அதனையே அவை நித்திரை எனக் கூறுகின்றன. இவ்வுலக வாழ்க்கைக் காலத்தினும் பார்க்கச் சுருக்கமான ஒரு காலத்தில் அவை வேறு மண்டலங்களுக்குச் செல்கின்றன. ஒரேவகை எண்ணமும் உணர்ச்சியும் உடையவை ஒன்றாகச் சேர்ந்து வாழ்கின்றன. கணவன் மனைவியராய் இம்மையில் வாழ்ந்தோர் மறுபடியும் கட்டாயமாக இணைக் கப்படவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள அன்பு இருக்கின்றது. மரணத்துக்குப்பின் ஆவிகள் பாதி உணர்ச்சியும், பாதி உணர்ச்சி இல்லாதது மாகிய ஒருவகை நிலையை அடைகின்றன. அவ்வாறு இருக்கும் கால எல்லை பலவகையினது. அவற்றுக்கு உடம்பில் நோய் அல்லது வருத்தம் உண்டாவதில்லை. மரண காலத்தில் நோய் உண்டாவதில்லை. மரணத்துக் குப் பின் பலவகைச் சமய நம்பிக்கைகளில் வேறுபாடு காணப்படுவதில்லை. மறு உலக வாழ்க்கையில் இருப்பவர்கள் திரும்பிவர விரும்புவதில்லை. அவர்களின் வாழ்க்கை இன்பமானது.
ஆவிகளுடன் பேசுதல் 2 (பிராட்லி கூறும் விவரம்)
யான் திவிக்கொவ் என்பவரின் விருந்தாளியாக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தேன். அவர், “ஆவி பேசுவதைப் பார்க்க விரும்புகிறாயா?” என்று என்னைக் கேட்டார். “பொழுதுபோக்காக அவ்வாறு செய்யலாம்” என நான் கூறினேன். அவர் ஜாட்ஸ் வலியண்டன் என்னும் ஆவியோடு பேசுகின்றவருக்கு (Medium) உடனே ‘தந்தி’ கொடுத்தார். 6-6-1923இல் இரவு உணவுக்கு முன் சிறிது நேரம் வலியண்டினோடு பேசிக்கொண்டிருந்தேன். நான் முன் ஒருபோதும் ஆவியோடு பேசுகின்றவர்களைச் சந்தித்ததில்லை. இரா உணவு கொண்டபின் சிறிது நேரம் நாங்கள் பொழுதுபோக்காகப் பேசிக்கொண்டிருந்தோம். ஆவியுடன் பேசுவதற்கு ஒரு அறை ஆயத்தஞ் செய்யப்பட்டது. அறையில் நான்கு பேர் இருந்தோம். திவிக்கோவ் ‘மீடியத் தின்’ கையில் இரு மினுக்கமான வளையங்களை மாட்டினார். இது அவர் கையை அசைத்தால் மற்றவர்கள் இருட்டில் பார்ப்பதற்காக ஆகும். நாங்கள் நாற்காலிகளில் வட்டமாக இருந்தோம். ஒவ்வொருவருக்கு இடையிலும் ஐந்தடி வெளி இருந்தது. நடுவில் இரண்டு எக்காளங்கள் வைக்கப்பட்டன. அவை அலுமினியத்தால் செய்யப்பட்டவை. அவைகளின் ஓரங்கள் பளபளப்பாக இருந்தன. உடனே விளக்குகள் அணைக்கப்பட்டன. இச் செயல் வீணானவை என்று எனக்குத் தோன்றின. அறிவாளிகள் இவ்வகை யான சிறு பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்களே என் நான் எண்ணினேன். நாங்கள் சிறிது நேரம் மனத்தில் தோன்றியவைகளை எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். ஒன்றும் நிகழவில்லை. பொழுது போக்குவதற்குச் சிறுவர் பாடுவது போல நாங்கள் சிறிதுநேரம் பாடினோம். எங்கள் எல்லோருடைய குரல்களும் மிக மோசமானவை. அவைகளுள் என் குரல் மிக மோசமானது. பாட்டை நிறுத்தவிட்டு மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்பு சிறிது நேரம் பாடினோம் இவ்வாறு செய்வது எனக்கு மிக வெறுப்பாக விருந்தது.
சடுதியில் ஒரு நிகழ்ச்சி உண்டாயிற்று; அமைதி நிலவிற்று. ஐந்தாவது ஒரு ஆள் அறையில் இருப்பது போல் நான் உணர்ந்தேன். ஒரு பெண்ணின் மெல்லிய குரல் அமைதியைக் கலைத்தது. அக் குரல் என்னைப் பெயர் சொல்லி அழைத்தது. அவ்வோசை எனக்கு மூன்று அடி தூரத்தில் இருந்து வருவதாகத் தெரிந்தது. அதைக் கேட்டு நான் குழப்பம் அடையவில்லை. நான், ‘ஆம்’ என்று வழக்கமான குரலில் விடை அளித்தேன். இருமுறை எனது குறித்த பெயர் சொல்லி அழைக்கப்பட்டது.
பிராட்லி : நான் இங்கு இருக்கிறேன்; எனக்கு என்ன சொல்ல விரும்புகிறாய்?
ஆவி : நான் உன்னை நேசிக்கிறேன்! நான் உன்னை நேசிக்கிறேன்!!
பிரா : நீ யார் என்று தயவுசெய்து எனக்குச் சொல்லுவாயா?
ஆவி : அன்னி
பிரா : உனது முழுப்பெயரையும் கூற முடியுமா?
ஆவி : உனது சகோதரியாகிய அன்னி.
பின்னே நாங்கள், எல்லோரும் கேட்கும்படி பலவற்றைப் பேசினோம். அவள் இறக்குமுன் நாங்கள் இருவரும் மிக அன்போடு இருந்தோம். அவள் எனக்கு வயதாற் சிறிது மூத்தவள். நாங்கள் பதினைந்து நிமிடங்கள் வரையில் பேசினோம். தான் பல ஆண்டுகளாக என்னோடு பேச முயன்று வந்ததாகவும், நான் செல்லும் இடங்களுக்கும் கூடவே சென்றதாக வும், நான் எழுதிய புத்தகங்களைப் பற்றித் தான் அறிந்ததாகவும், நான் தனிமையில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும்போது எனக்கு எண்ணங் களைத் தோற்றுவிப்பதில் உதவியாயிருந்ததாகவும் கூறினாள். அவள் பிரிந்து செல்வதன் முன் அடுத்த இரவில் வந்து பேச முடியுமோ எனக் கேட்டேன். “ஆம்” எனக் கூறினாள் எனது சகோதரி பிரிந்து சென்றபின் மேலும், இரண்டு மணி நேரம் ஆவிகளுடன் பேசப்பட்டது. ஐந்து ஆவிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து பேசின. ஓசைகள் அறையின் வெவ்வேறிடங் களிலிருந்து வந்தன. ஒவ்வொரு ஆவியின் குரலும் வெவ்வேறு வகையாக இருந்தது. ஆவிகள் வருவதன்முன் எக்காளங்கள் எழுந்து அறையைச் சுற்றி வந்தன.
இரண்டாவதாக வந்த ஆவி, தனது பெயர் ஆதர் பிராண்டி எனக் கூறிற்று. இவருடைய மரணத்துக்குப் பின் திவிக்கொவ், இவர் நிலத்தை விலைக்கு வாங்கியிருந்தார். அவ் வாவி இப்பொழுது சென்றிருக்கும் உலகத்தில் தான் மகிழ்ச்சியோடு வாழ்வதாகவும், இவ்வுலகுக்கு வருவதற்கு தான் விரும்பவில்லை என்றும் கூறிற்று.
அடுத்து வந்து பேசியது ஒரு கனடியனின் (கனடா நாட்டவன்) ஆவி. அது திருத்தமில்லாத ஆங்கிலமும் பிரஞ்சு மொழியும் பேசிற்று. அது தனது பெயர் ‘கோகும்’ எனக் கூறிற்று.
திவிக்கோவ் அவனை முன்னே அறிவார். அவர் அதைப் பாடும்படி கேட்டார். அது மிக உச்சமான குரலில் ‘வாபலோமா’ என்னும் பாட்டைப் பாடிற்று. அவ்வோசை கால் மைல் தூரம் கேட்கக் கூடியதாக இருந்தது. இவ்வளவு உரக்கப் பாடியமையால் அதற்கு மேலான வலிமை இருக்கலாம் என்று நான் நினைத்து, ‘என்னைத் தொட முடியுமோ? என்று கேட்டேன். உடனே ஒரு கை விரல் எனது தலையைத் தடவிற்று.
கோகும் சென்ற பின் வேறோர் ஆவி வந்தது. அவ் வாவியின் பெயர் பாட்ஒபிரியன். இவன் நாற்பத்திரண்டு ஆண்டுகளின் முன் கடலில் மாண்டான். அவன் சிகாகோவில் தச்சு வேலை செய்தவன். அயர்லாந்துக்குத் திரும்பி வரும்போது அவனுக்கு மரணம் நேர்ந்தது. இவ் வாவி சென்றபின் எவற் என்பவனின் ஆவி வந்தது. நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அது பதிலளித்தது. மரணத்துக்குப்பின் உயிர்கள் நிலைபெறுகின்றன என்னும் உண்மையை மக்களுக்கு அறிவிப்பதற்காகவே ஆவிகள் இவ்வுலகில் வந்து பேசுகின்றன என்றும் அது கூறிற்று. அடுத்து வந்தது. டாக்டர் குறுஸ்கொவ் என்பவரின் ஆவி. அது தான் ஆறு நாட்களுக்கு முன் இறந்து விட்டதாகவும், தனது உடல் எரிக்கப்பட்டதாகவும், அதனால் ஆவிக்குப் பங்கம் உண்டாயிருக்கக்கூடுமோ என்று தனது மாணவர் குழப்பம் அடைந் திருக்கிறார்கள் என்றும் உடல் எரிக்கப்பட்ட பின்னும், ஆவி இருக்கிற தென்று அவர்களுக்கு அறிவிக்கும்படியும் கூறிற்று.
அடுத்த நாள் சனிக்கிழமை (6-7-23) நாங்கள் ஆவியோடு பேசும் அறையில் இருந்தோம். விளக்கு அணைத்துக் கால்மணி நேரத்தில் உரத்த குரலில் இஸ்கொத்திய மொழி உச்சரிப்பில் ஒரு ஆவி வந்து பேசிற்று. எனது சகோதரியின் ஆவி வருமோ என்று நான் நினைத்தேன். உடனே அவ்வாவி வந்து பேசிற்று. நாங்கள் இருவரும் இருபது நிமிடங்கள் வரையில் பேசினோம்.
பின்பு ஒரு பெண்குழந்தையின் ஆவி வந்து பேசிற்று. அவளது பெயர் அனி. அவளுக்கு ஒரு கால் நொண்டியாயிருந்தது. அவள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளின் முன் இறந்துபோயினாள். அவள் தான் வளர்ந்து வருவதாகவும், பள்ளிக் கூடத்தில் படிப்பதாகவும், இப்பொழுது தான் நொண்டியல்லள் என்றும் தனது வாழ்க்கை இன்பமாயிருக்கிற தென்றும் கூறினாள்.
பெண்ணின் ஆவி கூறியவை
1940ஆம் ஆண்டு பெண் ஒருத்தியின் ஆவி, பிளஞ்சட் என்னும் கருவி மூலம் எழுதியவை மைசூரில் இருந்து வெளிவரும் ‘மிதிக் இதழில்’ (Mythic magazine) 1942ஆம் ஆண்டு வெளியாயின. அவ் வாவி கூறியவை பெரும்பாலன மேல்நாட்டு நூல்களில் வெளிவந்தவைகளை ஒத்துள்ளன. ஆவிகள் கூறுகின்றவைகளில் சில மாறுபாடுகளும் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் இவ்வுலகில் மக்களுக்கு எவ்வாறு எல்லாக் கருத்துக் களும் நன்கு தெரியாதோ, அப்படியே ஆவிகளுக்கும் உண்டு என ஆவி ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். பெண்ணின் ஆவி கூறியவற்றில் சிலவற்றை இங்குத் தருகின்றோம்.
கேள்வி : நீ யார்?
மறுமொழி : நான் பிளஞ்செட்
கே : இவ்வுலகில் ஆவிகள் உண்டா?
ம : ஆம்
கே : நீ இவ்வுலகில் ஏன் தங்கி நிற்கின்றாய்?
ம : நான் ஒரு பெண்ணின் ஆவி; நான் அமிஸ்ரார் என்னும் இடத்திற் கொல்லப்பட்டேன். என் கணவர் என்மீது சந்தேகங் கொண்டு நடு இரவில் கொன்றுவிட்டார். அவர், அரசினர் தண்டனைக்குட்பட்டு அந்தமான் தீவில் இருக்கிறார்.
கே : இது எப்பொழுது நிகழ்ந்தது?
ம : 1917இல்
கே : நீ வருங்காலத்தைப்பற்றிக் கூறமுடியுமா?
ம : கூற முடியாது
கே : உனக்கு இரவும் பகலும் உண்டா?
ம : இல்லை
கே : நீ உணவு உண்கிறாயா?
ம : இல்லை
கே : எப்படி உணவின்றி நீ இருக்கமுடியும்?
ம : எங்களுக்கு ஊன் தொடர்பான உடல் இல்லை
கே : கெட்ட ஆவிகள் உண்டா?
ம : ஆம்
கே : அவை ஏன் மக்களைப் பிடித்துத் தொந்தரவு செய்கின்றன?
ம : அவர்களுக்குத் தீமை செய்யவேண்டும் என்னும் விருப்பினால், தீமை செய்வது அவர்களுக்கு விளையாட்டு.
கே : ஒருவரை ஒருவர் அறிய உங்களுக்கு வடிவு உண்டா?
ம : ஆம்.
கே : மரணத்துக்குப் பின் என்ன நிகழ்கிறது?
ம : ஆவி, ஆவி உலகத்தை அடைகின்றது
கே : பின்பு என்ன நிகழ்கின்றது?
ம : அதனதன் தரத்துக்கேற்ற உலகத்துக்கு அனுப்பப்படுகின்றது.
கே : மரணத்துக்குப்பின் சுற்றத்தவர்மீது பற்று உண்டா?
ம : ஆவிகளுக்கு இவ்வுலகத் தொடர்பு இருந்தால், உண்டு.
கே : இவ்வுலகத் தொடர்பு என்றால் என்ன?
ம : நிறைவேற்றப்படாத ஆசைகள்.
கே : அவ்வகை ஆவிகள் கெட்டவையா? நல்லவையா?
ம : பெரும்பாலும் நல்லவை.
ஆவிகளின் நேர் பேச்சு
1ஒருவன் அல்லது ஒருத்தி மரணத்துக்குப்பின் வாழ்வதைப்பற்றி அறிந்துகொள்வதற்கு உனக்கு அல்லது எனக்கு எவ்வகையான அத்தாட்சி வேண்டும். இறந்தவர் எங்களுக்கு முன் தோன்றிப் பேசுவதே போதிய அத் தாட்சியாகுமென்று நினைக்கிறேன். அது மிகவும் நேரடியான அத்தாட்சியே யாகும். மரணத்துக்குப்பின் என்ன நிகழ்கின்றது என்று ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் இதைவிட நூற்றுக்கணக்காண சான்றுகளை அறிவார்கள்.
எனது மகன் யான் பதினோராவது வயதில் மரணமானான். 1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி எனது நண்பர் ஒருவர் வீட்டில் யானின் குரல் கேட்டது. இதனை நானும் பிறரும் கேட்டோம். “எனது தந்தையுடன் பேசப்போகின்றேன்” என்பதே முதல் வார்த்தையாகும். பின்பு அவன் உற் றாண்மையானதும் என்னோடு சம்பந்தப்பட்டதுமாகிய சில செய்திகளைக் கூறினான். இறந்தவர்களுடன் பேசுவதில் பெரிதும் சந்தேகப்படுகின்ற நான் எனது பையனே பேசுகின்றானென்றும் இதில் யாதும் புரளி இல்லை என்றும் அறிந்துகொண்டேன். எனக்கு அப்பொழுது இருந்த கவலையையும் அதைப் போக்கும் வழியையும் அவன் எனக்குக் கூறினான். அவ்வறைக் குள் இருந்த எவரேனும் இவைகளை ஒரு போதும் முன் அறிந்திருக்க முடியாது. இச் சத்தம் ‘நேர் ஒலி’ எனப்படும். நேர் ஒலி என்பது ஆவேசித்துப் பேசுபவர் மூலமன்றி வானில் நின்று வருவது.
அவ்வாண்டில் மே மாதம் 5ஆம் நாள் அவன் தனது தாய்க்கும் சகோதரிக்கும் செய்தி அனுப்பினான். அதே ஆண்டில் அக்டோபர் மாதம் 20ஆம் நாள் யான் உச்சரிப்பதற்கு அதிகம் வில்லங்கமான தனது சகோதரி யின் பெயரைக் கூறினான். அங்கிருந்த எவருக்காவது யானைப்பற்றித் தெரியாது. அப்பொழுது சேகிரேவ் அம்மையாரும் பிறரும் சமூகமாயிருந் தார்கள். அவன் தான் அடைந்துள்ள மனமாற்றங்களைப் பற்றிக் கூறினான். அடுத்தபடி செப்டம்பர் மாதத்தில் அவன் என்னோடு தெளிவாகப் பேசினான். அவன் பேசும் குழல் ஒன்றை எனது முழங்கால்மீது வைத்துத் தான் பேசுவதைப் பிறர் கேளாதபடி பேசினான். நான் குனிந்து குசுகுசுத்துப் பேசினேன். அவனுடைய குரலும் குழல் வழியாகக் குசுகுசுத்து வந்தது. இப் பேச்சு தனதும் தனது தாய் சகோதரியரின் மனோநிலை சம்பந்தமானதாகும். அப்பொழுது அவனுடைய தாய் விசேஷ சிகிச்சை ஒன்று பெற்றுவந்தாள். இதைக் குறித்து அவன் சம்பாஷித்தான். நான் அவனைக் கடைசியாக 1940ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி சந்தித்தேன். பல ஆண்டுகளாக நாம் அடிக்கடி சந்தித்தோம். நான் அவன் இறந்துபோனதாக ஒரு போதும் நினைக்கவில்லை.
சர் அலிவர் லாட்ஸ் தனது மகன் ராய்மண்டோடு பலமுறை சம்பாஷித்திருக்கிறார். இறந்தவர்களோடு பேசுவதற்கு மீடியம் (ஆவேசித்துப் பேசுவோர்) தேவையாயினும் நேர் பேச்சுக்கு மீடியம் தேவையில்லை. பேச்சு ஆகாயத்தில் நின்று நேரே வருகின்றது. இவ் வுண்மையை ஆவி ஆராய்ச்சியாளர் நன்கு அறிவார்கள். இவ்வாறு ஆவிகள் நேரே பேசுவதை நான் பல தடவைகளிற் கேட்டிருக்கிறேன். சில சமயங்களில் பல ஆவிகள் ஒருமித்துப் பேசின. இவ்வாறு இறந்தவர்களின் ஆவிகள் இலண்டனில் பலர் முன்னிலையில் சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கின்றன.
இறந்துபோன சர் ஹென்றி செர்கேவ் என்பவர் தனது மனைவியுடன் பேசியிருக்கின்றார். அவர் பேசிய காரியங்கள் அவ்விருவருக்கும் மாத்திரம் தெரிந்தவை. அவருடைய ஆவி வடிவு அறையை விட்டவுடன் என்னுடன் வந்து மரியாதையாகப் பேசிற்று. எங்கள் பேச்சு ஒன்று 1933ஆம் ஆண்டு சூன் மாதம் 2ஆம் நாள் நிகழ்ந்தது.
எங்கள் காலத்தில் பேர்போன ஆசிரியர்களுள் ஒருவரும் மறு பிறப்பைப்பற்றி ஒரு நாடகம் எழுதியவருமாகிய ஒருவர் என்னுடன் பல தடவைகள் பேசினார். அவரது பெயரை வெளியிடுவதை அவர் மனைவி விரும்பவில்லை. அவர் மரணமான சிறிது நாட்களின்பின் 1933ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் அவர் என்னோடு பேசினார். அப்பொழுது இருபது பேர் சமூகமாயிருந்தனர். செகிரேவ் அம்மையார் அவர்களுள் ஒருவர்.
ஒரு முறை செர் ஆதர் கனன்டேலின் ஆவி இருபத்துமூன்று பேருக்கு எதிரே என்னுடன் பேசவேண்டுமெனக் கூறிற்று. ஆவிகள் பேசுவதில் சந்தேகமும் கவனமுமுடைய நான் பேசப்போவது கனன்டேல் தானென்று அத்தாட்சிப்படுத்தும்படி சொன்னேன். அவர் என்னைக் காட்சி முறையாகச் சந்தித்த இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். இது சரியாக இருந்தது. நாங்கள் இருவரும் வெஸ்ட்மின்ஸ்டரில் விக்டோரியா வீதியில் பெருமழைக்கு ஒதுங்கி நிற்கும்படி ஒரு வீட்டு வாயிலுக்கு ஓடிச்சென்று நின்ற போது சந்தித்தோம். பின் அவர் தனது மனைவிக்கும் மகன் டெனிசுக்கும் செய்தி சொன்னார். அப்போது சர்ஹென்ரி செகிரேவும் பேசினார்:
மீடியங்களும் ஆவிவுலகப் பேச்சும்
பல காலமாக மறு உலகத்துக்கும் இவ்வுலகத்துக்குமுள்ள ஆராய்ச்சி களில் ஈடுபட்டிருந்தேன். ஆவி உலகத்துக்கும் இவ்வுலகத்துக்கும் பெரிய வேறுபாடு உண்டு. அங்கு வாழுகின்றவர்களுக்கு இவ்வுலகம் எங்களுக்கு எவ்வாறு தோன்றுகிறதோ அவ்வாறு திடமுடையதாக இருக்கின்றது. மக்க ளுடைய உடல் ஒரே வகையான வேகத்தில் இயங்கும்போது திடம்போல் தோன்றும். ஓர் ஆவி மூடப்பட்ட கதவுக் கூடாகச் செல்லமுடியும்; கூடிய இயக்கமுள்ள பொருள், குறைந்த இயக்கமுள்ள பொருள்களுக் கூடாகச் செல்லக்கூடும். அதற்குக் கதவின் தடுப்பு இல்லை. அது தனது இயக்கத் தின் வேகத்தைக் குறைக்கும்போது ஆவி சதையும் இரத்தமுள்ள மனித சரீரம்போலத் திடமுடையதாகின்றது. அப்பொழுது அது கதவுக்கூடாகக் செல்லமுடியாது.
இவ்வாறு செல்லும் ஆற்றலைப்பற்றி உயிரோடிருக்கும் பலர் அறிந் துள்ளார்கள். எனது நண்பனான யோனானிஸ் கொலென்பேக் என்னும் டானிஸ்காரர் நினைத்தபோது தனது உடலைவிட்டுச் செல்லும் ஆற்றல் பெற்றிருந்தார். இவ்வாறு நுண்ணுடலோடு பயணஞ் செல்லக்கூடியவர்கள் நம்மவர் அறைகளுள் செல்லமுடியும். மீடியம் மூலம் ஆவி உலகத்துக்கும் இவ்வுலகத்துக்கும் இடையிலுள்ள கதவு திறக்கப்படும்போது கீழ் நிலையி லுள்ள ஆவிகள் குறும்பு செய்வதுமுண்டு; இதனால் உண்மையல் லாத பல செய்திகள் கிடைக்கின்றன. இப் பூமியில் வாழும் பல திறப்பட்ட மக்களை ஒப்பவே மறு உலகிலும் பலதிறப்பட ஆவிகள் உறைகின்றன. இது பற்றித் தான் மறு உலகிலிருந்து வரும் செய்திகள் பல பொருளற்றனவாகக் காணப்படுகின்றன.
ஆவி உலகிலிருந்து கிடைத்த செய்திகள் அபாயங்களிலிருந்து பலரைக் காப்பாற்றியிருக்கின்றன; குற்றமற்ற பலரைப் பொய்யான குற்றச் சாட்டுகளிலிருந்து தப்ப வைத்திருக்கின்றன; இழந்துபோன மரண சாசனங்களைக் கண்டுபிடிக்க உதவி செய்திருக்கின்றன.
பல நாடுகளில் போலிசார் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கு ஆவி களுடன் பேசுவோரைப் பயன்படுத்தி வருகின்றனர். 1914ஆம் ஆண்டு யுத்த காலம் முதல் பல நாடுகள் இம் முறையைக் கையாண்டு வருகின்றன. இவ்வாறு ஆலோசனை செய்யுமுன் ஹிட்லர் ஒரு கருமத்தைப்பற்றித் தீர்மானத்துக்கு வருவதில்லை எனஅவரது முன்னைய நண்பராகிய ரோச்நிங்(Rauschning) அவரைக் குற்றஞ் சாட்டியிருக்கின்றார்.
உலோக சம்பந்தமானவை தாவரங்களாகவும், தாவரங்கள் சிற்றுயிர்க ளாகவும், சிற்றுயிர்கள் விலங்குகள் பறவைகளாகவும், விலங்குகள் பறவைகள் மனிதராகவும் மாறுகின்றன என்பதற்குப் பிராணி நூல் சான்றளிக்கின்றது. பூமியல்லாத மற்றக் கிரகங்களில் இப் பூமியிலுள்ள உயிர்கள் போலல்லாதவையும் போன்றவையுமான உயிர்கள் இருக்கின்றன என்று ஆவி உலகத்தவர் கூறி இருக்கின்றனர். சமய நூல்கள், தேவர்களையும் தேவதூதர்களையும் பற்றிக் கூறியுள்ளன. இவ் வுலகுகளிலிருந்து மேல் உலகங்களுக்குச் செல்ல மரணமுண்டாகின்ற தென்று ஆவிகள் கூறு கின்றன. எங்கள் உலகம் ஏழு பிரிவுகளாக உள்ளன என்றும், நாம் இறந்ததும் நாம் எம்மை ஆயத்தஞ் செய்துகொள்ளும்படி மரணகாலத்தில் அவை களுள் ஒன்றுக்குச் செல்கின்றோமென்றும் அவை கூறுகின்றன. உயர்வான எண்ணமும் உயர்ந்த வாழ்க்கையுமுள்ளவர், உயர்ந்த மண்டலத்துக்குச் செல்வார். சாதாரண மக்கள் பொதுவாக மூன்றாவது உலகத்துக்குச் செல் கின்றனரென்றும் அங்குள்ள நிலைமை உடலளவில் வேறுபாடன்றி மற்றைய எல்லா வகையும் பூமியிலுள்ளது போன்றது என்றும் அவை கூறுகின்றன. நாம் மூன்றாமுலகைவிட்டு நாலாம் உலகை அடையும்போது மனித வடிவம் மாறுபட்டு இன்னொரு வடிவம் உண்டாகின்றதென்றும், அது ‘கூட்ட உயிர்’ என்றும் அவ்வுலகை அடைந்த மேயர்ஸ் முதலிய சாத்திர அறிஞர் கூறியுள்ளார்கள். கூட்டு உயிர் என்பதைப் பற்றி இன்னோரிடத்திற் கூறுவோம். இவ் வுலகத்தில் நாம் வாழும்போது நாம் அக்கூட்டத்தின் உறுப்பினரென்றும் மரண காலத்தில் அக் கூட்டத்தை அடைகின்றோ மென்றும் எங்கள் உண்மையான வீடு மறு உலகமேயன்றி இவ்வுலக மல்ல வென்றும் அவர் கூறியுள்ளனர். அங்கு நேரமும் தூரமும் இல்லையென்றும், நேரம் உலகத்தின் சுழற்சியைப் பொறுத்ததென்றும், எங்கள் நேரம் என்றும் மூன்றாம் உலகத்தின் நேரமல்ல என்றும் கூறியுள்ளார்கள்.
ஆவிகளை அழைப்பது எப்படி?
எங்கள் நாட்டில் சிலர் சில தேவதைகளை வாலாயம் பண்ணியிருக் கிறார்கள் என மக்கள் நம்பி வருவதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவர்கள் தேவதையை அழைப்பதற்குத் தேவதையை நினைக்கிறார்கள் என்றும் அறிகிறோம். ஒருவரைப்பற்றி இன்னொருவர் நினைத்தால், அவருக்குத் தும்மல் உண்டாகின்றது என்றும் நம்பப்படுகின்றது. ஒருவர் மனத்தில் நினைப்பதை அறிந்து கூறும் ஆற்றல் பலரிடம் உண்டு. இதனை மேல்நாட்டவர்கள், ‘தாட்ஸ் ரீடிங்’(Thoughts reading) எனக் கூறுகிறார்கள். எங்கள் நாட்டில் இது “நினைத்த காரியம் சொல்லுதல்” என்னும் பெயர் பெற்று வழங்குகின்றது. இவற்றால் ஒருவர் நினைவு இன்னொருவர் உள்ளத் தில் பதியத்தக்கது என நாம் அறிகின்றோம். எண்ணங்களுக்கு வடிவு உண்டு. இது மேற்புல அறிஞரால் ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டது. இது போன்ற இயற்கை விதியினால் ஒருவர், இறந்தவரைப்பற்றி உறுதியாக நினைத்தால் அந் நினைவு இறந்தவர்களின் அறிவுக்கு அறிய வருகின்றது. அப்பொழுது அவை இவ்வுலகுக்கு வந்து, தாம் ஆவேசித்து நின்று பேசத் தகுதியுடையவர் மூலம் பேசுகின்றன1. எல்லோர் மூலமும் ஆவிகள் பேச மாட்டா. சிலருடைய உடல், மூளை அமைப்புக்களே ஆவிகளை ஏற்றுப் பேசத் தக்கன. ஒரு உடலில் இரண்டு ஆவிகள் தங்குவதால், (தகுதியற்றவர் களினுடலில் ஆவிகள் ஆவேசித்தால்,) அவர்களின் மூளை நொறுங்கிக் கெட்டுவிடும் என்று கருதப்படுகின்றது. பேய்கள் எல்லோரையும் பிடிப்ப தில்லை. சிலரையே பிடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்குக் காரணம் முன் கூறப்பட்டதாகலாம்.
சீனர் ஆவியோடு பேச அறிந்திருந்தார்கள்
சீனர் பழங்காலத்திலேயே வீ (V) வடிவான பிளஞ்சட்1 மூலம் ஆவி களோடு பேசினார்கள். கேள்விகள் கடுதாசியில் எழுதிக் கொடுக்கப்பட்டன. ஆவியோடு பேசுகின்றவர் கேள்விகளை மற்றவர்கள் அறியுமுன் பலிபீடத் துக்கு முன்னால் நெருப்பில் இட்டுக் கொளுத்தினார். “பிளஞ்சட்” அக் கேள்விகளுக்கு விடை எழுதிற்று. இக் கருமம் இதனையே தொழிலாக உள்ள சிலரால் மாத்திரம் செய்யப்பட்டது. பிளஞ்சட் என்பது இருதய வடிவான ஒரு கருவி. அதில் ஆவியோடு பேசுகின்றவர் எழுதுகோலையும் கீழே தாளையும் வைத்திருந்தால் ஆவி கையை இயக்கி எழுதும்.
இன்னொரு முறையாகவும் அவர்கள் ஆவியோடு பேசினார்கள். இதைப் பற்றிய வரலாறு ஏழாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கியங் களில் காணப்படுகின்றது. ஆவியோடு பேசுகிறவனுக்கு முன்னால் மெழுகுத் திரி கொளுத்தி வைத்துச் சாம்பிராணிப் புகை போடப்பட்டது. அப்பொழுது அவன் மயக்க நிலை அடைந்து சிலவற்றைக் கூறுகின்றான். அவன்மீது ஆவி ஆவேசித்திருப்பதாகக் கருதப்படுகின்றது.2
தெளிவுக் காட்சி (CLAIRVOYANCE)
ஒரு முனிவரோ, தேவனோ, ஒருவனுக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து ஆபத்துக் காலத்தில் அம் மந்திரத்தை உச்சரித்துக் தம்மை நினைத்தால், தாம் வந்து உதவி செய்வதாகக் கூறினார்கள் என்பது போன்று உள்ள பழங்கதைகள் தொலைவில் உணர்தலை(Telepathy) அடிப்படையாகக் கொண்ட கதைகளாகும். தொலைவிலுணர்தல் என்பது தொலைவிலிருந்து ஒருவர் நினைப்பதை மற்றொருவர் அறிதல். தெளிவுக் காட்சி என்பது தொலைவிலும் அண்மையிலும் நிகழும் செய்திகளைப் பிறர் நினைக்காமலே இயல்பாக அறியும் ஆற்றல். முனிவர்கள் “ஞான திருட்டி யால்” தொலைவில் நிகழ்ந்தவற்றைக் கூறினார்கள் என வரும் பழங் கதைகள் தெளிவில் உணர்தலுக்கு எடுத்துக் காட்டாகும். இவ்வாற்றல் எல்லாமக்களிடத்தும் இயல்பாக மறைந்து இருக்கின்றது.
மனிதனுக்கு வெளிமனம் உள்மனம் என இருமனங்கள் உள்ளன. விழிப்பு நிலையில் தொழிற்படுவது வெளிமனம். மனோவசிய முறையில் அறிதுயில் கொள்ளும்படி செய்யப்பட்ட ஒருவனுக்கு உள்மனம் விழிப்பு நிலையில் இருக்கின்றது. இந் நிலைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் கண்ணால் பாராமலே அயலே உள்ள பல நிகழ்ச்சிகளைக் கூறவல்லவர் களாயிருக்கின்றனர்.
இதனைச் சென்னை வீதிகளில் தினமும் பார்க்கலாம். ஒருவன் சில வித்தைகளைக் காண்பித்தபின், மற்றொருவனை மயக்க நிலைக்குக் கொண்டு வருகின்றான். பின்பு அவனுடைய முகம் துணியால் மூடப்படு கின்றது. சூழ நிற்பவர்களில் ஒருவன் வைத்திருக்கும் நாணயம் எவ்வகை யினது, எப்பொழுது அடிக்கப்பட்டது என்று கேட்டால் அவன் சரியான விடை அளிக்கிறான்; இப்படியே கடிகாரத்தில் நேரமென்ன? ஒருவன் மனத் தில் நினைப்பது என்ன என்பவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் அவன் சரியான விடை அளிக்கின்றான். இது எல்லோருக்கும் வியப்பளிப்பதாகவே இருக்கின்றது. யோகம் என்பதும் வெளிமனம் தொழிற்படாது உள்மனம் தொழிற்படும்படியான ஒருவகை நிலையில் இருப்பதேயாகும். ஆனால் மனோவசிய அறிதுயிலுக்கும் யோக அறிதுயிலுக்கும் வேறுபாடு உண்டு. சிலருக்குத் தெளிவுக் காட்சி உணர்ச்சி, இயல்பாகவே அமைந்துள்ளது.
1759ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் ஒரு நாள் சனிக்கிழமை மாலை சுவிமன்பேக் என்பவர் இங்கிலாந்திலே கொத்தின்பேக் என்னும் இடத்துக்குச் சென்றிருந்தார். அவர் அங்கு நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி யிருந்தார். அவர் இரண்டு மணி நேரம் வெளியே சென்றபின் ஸ்டோக் ஹோல்ம் என்னும் இடத்தில் மோசமான தீ மூண்டெரிவதாகக் கூறினார். ஸ்bடாக்ஹோல்ம், கொத்தின்பேக்கிலிருந்து ஐம்பது மைல் தூரத்திலுள்ளது. அவர் நெருப்பு விரைவாகப் பரவுகின்றது என்று சொல்லிக்கொண்டு அடிக்கடி வெளியே சென்றார். அவர் தனது நண்பர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் வீடு சாம்பலாகி விட்டதென்றும் தனது வீடு அபாய நிலையில் இருக்கின்றதென்றும் கூறினார். எட்டு மணி அளவில் அவர் முகம் மலர்ச்சி அடைந்தது. தனது வீட்டிற்கு மூன்றாவது வீட்டில் நெருப்பு அணைக்கப்பட்டுவிட்டதெனக் கூறினார். இந் நிகழ்ச்சி பட்டினத்தில் அதிகக் கிளர்ச்சியை உண்டுபண்ணிற்று. இதற்கிடையில் இச் செய்தி கவர்னருக்குக் கிட்டிற்று. ஞாயிற்றுக்கிழமை காலை கவர்னர் சுவிமன்பேக்கை அழைத்துத் தீயைப்பற்றி வினவினார். அவர் உடனே எப்படித் தீ ஆரம்பித்தது என்றும், அது எவ்வளவு நேரம் எரிந்ததென்றும், அது எப்படி அணைக்கப் பட்டதென்றும் கூறினார். திங்கட்கிழமை காலையில் நெருப்பைப் பற்றிய செய்தி கொத்தின் பேக்குக்குக் கடிதமூலம் வந்தது. அது சுவிமன்பேக் கூறியது போலவே இருந்தது.*
ஹான்ட்ஸ் என்பவர் எலின் என்பவளுக்கு மனவசிய முறையாக நோய்க்கு வைத்தியம் செய்தார். அவள் மயக்க நிலையில் ஆழ்ந்திருந்த போது, கண்ணினால் பாராமலே பொருள்களைக் கண்டாள்; அவள் தான் நேரில் பாராத இடங்களையும் மக்களையும் பற்றிச் சரியாக விவரித்துக் கூறினாள். கண்ணுக்குப் பஞ்சுவைத்துக் கட்டியபின், இருட்டறையில் காட்டப்பட்ட அச்சிட்ட படங்களை அவள் சரியாகக் கூறினாள்.*
கூட்டமான உயிரும் பேருயிரும் (THE “GROUP SOUL” AND “GREATER SELF”)
நாங்கள் உடல் சம்பந்தமாகவும் பலவாறு கூட்டப்படுத்தப்பட்டிருக் கின்றோ மென்பதற்குப் பல அடையாளங்கள் உண்டு. ஒரு ஆணாவது ஒரு பெண்ணாவது தனக்காக வாழமுடியாது. இவ்வுலக வாழ்க்கையில் நாம் மற்றவர்களோடு இணைக்கப்படுகின்றோம். நாம் சிலரால் கவரப்படுகின் றோம்; அவர்கள் எங்களால் கவரப்படுகின்றார்கள். நாம் சிலரை மறுபடியும் மறுபடியும் எதிர்பாராத இடங்களில் பலமுறை சந்திக்கின்றோம். வாழ்க்கை யில் நாம் ஒருபோதும் பார்த்திராத சிலர் எங்களுக்கு அறிமுகப்பட்டவர் களாகவும் தோன்றுகின்றனர். சிலரை நாம் பார்த்தமாத்திரத்தில் வெறுக்கின் றோம். இவைகளுள் பல கூட்டமான உயிர்கள் என்பதைப்பற்றி அறிவிக் கும் சான்றுகளாகும். கூட்டமான உயிர்கள் என்றால் என்ன? இங்கு கூறப்படு கின்றவைகளுள் பல செய்திகள் அவ் வுலக ஆவிகளாற் கூறப்பட்டனவும் நாம் நித்திரையில் மறு உலகிலுள்ள கூட்டமான உயிர்களோடு தொடர்பு பெறுவதாலும் பெற்ற அனுபவத்தாலும் கிடைத்தனவாகும்.
நாம் எல்லோரும் மறு உலகத்திலுள்ள கூட்டங்களுள் சிலவற்றைச் சேர்ந்தவர்களாவோம். இவ்வுலகம் நமது உண்மையான உறைவிடமன்று. நாம் சில அனுபவங்களைப் பெறும் பொருட்டு இப் பூமியில் சில காலம் தங்குவதற்கு வந்தவர்களாவோம். ஆவி உலகில் நாம் இருக்கும்போது இவ்வுலகில் நாம் பிறப்பதற்கு அடிக்கடி அழைப்பு வருகின்றது. விரும்பி னால் நாம் அவ் வழைப்புகளை மறுக்கலாம். மற்றவைகளில் சுதந்திரம் இருப்பது போலவே இவ்வாறு மறுப்பதற்கும் எங்களுக்குச் சுதந்திரம் உண்டு. உடனோ காலந்தாழ்ந்தோ நாங்கள் அழைப்புக்கு உடன்பட்டுப் பூமிக்குச் செல்கின்றோம். நாம் இவ் வுலகைவிட்டுப் போகும்போது எங்கள் கூட்டத்தினர் எப்படி நம்மைச் சுற்றிக் கூடுகிறார்களோ அப்படியே நாம் ஆவி உலகத்தைவிட்டு இவ்வுலகுக்கு வரும்போதும் நாம் எக் கூட்டத்தைச் சேர்ந்துள்ளோமோ அக் கூட்டத்திலுள்ள நமது நண்பர் கூடி எங்களை வழியனுப்புகிறார்கள். நாம் மறுபடியும் ஆவி உலகை அடையும்போதும் அவர்கள் நம்மை வரவேற்கிறார்கள். நாம் எழுபது ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்திருக்கலாம். அது காலம் இல்லாத அவ்வுலகில் கழிந்த ஒரு மாலைப் பொழுதுபோல் இருக்கலாம். எம்மை இவ்வுலகிலும் அவ்வுலகிலும் ஒரு குறிக்கப்பட்ட கூட்டத்தில் சேர்ப்பது எமது அனுதாப உணர்ச்சியும் விளங்கிக் கொள்ளும் தன்மையுமாகும். இக் காரணம் பற்றியே நாம் இப் பூமியில் காண்கின்ற ஒரு சிலர்மீது வெறுப்பும், வேறு சிலர் மீது விருப்பும் உண்டாகின்றது.
நாம் திரும்ப ஆவியுலகத்துக்குச் செல்லும்போது நாம் இவ்வுலகில் நுகர்ந்த இன்பங்கள் துன்பங்கள் மூலம் அடைந்த அனுபங்களோடு எங்கள் கூட்டத்துக்குச் செல்கின்றோம். இவ் வனுபவங்கள் எங்கள் கூட்டத்தினர் எல்லோருக்கும் பொதுவான முதற் பொருள் போன்றன. இவ் வனுபவங்கள் அக்கூட்டத்தின் அறிவு வளர்ச்சிக்கும் அக் கூட்டத்தில் ஒவ்வொரு உயிரின் விரிவளர்ச்சிக்கும் வேண்டப்படுவனவாகும். நாம் இவ்வுலகில் தங்கும் காலம் நாம் ஓரிரவு ஒரு விடுதியில் தங்கியது போலாகும். நாம் உணரா விட்டாலும் நாம் ஒவ்வொரு நொடியும் மறு உலகிலுள்ள கூட்ட உயிரோடு தொடர்புடையவர்களாக இருக்கின்றோம்.
நாம் ஒவ்வொரு இரவும் நித்திரை கொள்ளும் போது உயிர் இப்பரு உடலைவிட்டு மறு உலகிற் சென்று தனது கூட்டத்திலுள்ள உயிர்களையும் தனது கூட்டத்திற்குப் புறம்பேயுள்ள பிற உயிர்களையும் சந்திக்கின்றது. ஆவி உலகில் உள்ளவர்கள் கூறுவதனால் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு நாட்காலையிலும் தான் சந்தித்த உயிர்களோடு நடத்திய பேச்சுகளை ஞாபகத்தில் வைத்துச் சொல்லப் பழகிய சிலர் மூலமாகவும் இவ்வுண்மையை அறிகின்றோம். சில சமயங்களில் தனிப்பட்டவர்களாக இருப்பதாக நினைந்து வருந்தும் நிலை உண்டாகின்றது. இது நாம் எமது தாயுலகமாகிய ஆவி உலகிலிருந்து பிரிந்திருப்பதை நினைவுக்குக் கொண்டுவரும் மறைந்து நிற்கும் உணர்ச்சியினாலாகும்.
இதை ஊன் இரத்தங்களோடு கூடிய இவ்வுடலை எடுத்து வாழ்வது தன்னலத்தைத் துறத்தலாலும், மற்றவர்க்கு உதவி செய்வதினாலும் துயருறுதலினாலும் நாம் ஈடேற்றம் அடைகின்றமையால் இத் துறவு வேண்டியதாகும். கிறித்துநாதராகிய பெரியவரே இவ் வகைத் துறவுக்குத் தம்மை ஒப்படைத்தார்.
இக் கூட்ட உயிர் தனித்தனி உயிர்களால் உண்டாயிருப்ப தல்லாமல் இவ் வுயிர்களுக்கெல்லாம் விளக்கமளிக்கும் ஒரு பெரிய உயிராலும் உண்டாகி இருக்கின்றது. கோடிக்கணக்கான சிறிய உயிர்க் கோளங் களாலான மனித உடலுள் பெரிய ஓர் உயிர் இருப்பதை இதற்கு ஒப்பிடலாம். பகை அல்லது அன்பு எங்களை இக் கூட்டங்கள் ஒன்றில் சேர்த்துவிடலாம். உயர்ந்த உலகில், பகை அன்பாக மாறுகின்றது. ஒவ்வொரு கூட்டத்திலு முள்ள உயிர்களின் எண்களும் மாறுபடுகின்றன. ஒவ்வொன்றிலும் பத்து இருபது அல்லது பத்துலட்சம் இருக்கலாம். ஆனால் அவை எல்லாவற்றுக் கும் ஒரே வகை அனுதாபமும் விளக்கமும் உண்டு. அவை ஒன்றின்மேல் ஒன்று அன்பாக இருத்தலையும் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்தலையும் மகிழ்ச்சியாகக் கொள்கின்றன.
நாம் பரவச நிலையடைகின்ற காலத்தில் நமக்குப் பின்னால் பெரிய ஆற்றல் ஒன்று இருப்பதாகவும் அது எங்களின் பகுதியாக்கியிருப்பதாகவும் உணர்கின்றோம்.